
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நான் இப்போ சொல்ல போறது என்னுடைய 2 நாள் ஊட்டி பயணம் பற்றிதான். வாங்க ஜாலியா ஊட்டியை சுற்றி பார்க்கலாம்.
என்னுடைய பயணம் வெள்ளி இரவு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது. சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு 09:00 மணிக்கு நானும் எனது நண்பரும் கிளம்பி அதிகாலையில் மேட்டுபாளையம் ரயில் நிலையத்தில் இறங்கினோம்.
மேட்டுபாளையம் ரயில் நிலையம் அதிகாலையில் பனி படர்ந்த சூழல் அவ்வளவு அழகாக ரம்மியமாக காட்சி அளித்தது.
மேட்டுபாளையத்திலிருந்து ஊட்டிக்கு பேருந்தில் தான் சென்றோம். எனக்கு உயரமான பகுதி என்றால் சற்று பயம் தான், இருந்தும் கொண்டை ஊசி வளைவுகளில் எனது பயத்தையும் மீறி ரசிக்க தொடங்கிவிட்டேன்.
சாலையில் செல்லும்போது ஊட்டியின் அழகை காண்பதற்க்கு இரு விழிகள் போதவில்லை. செல்லும் வழி எல்லாம் வண்ண மலர்கள் கண்ணை கவர்ந்து இழுத்தது.
சாலையோரத்தில் ஆங்காங்கே சிறு சிறு நீரோடைகள் மலையிலிருந்து வழிந்தோடியது. எங்கள் பயணத்தில் முதலில் நாங்கள் சென்றது ஊட்டி தாவரவியல் பூங்கா தான்.
அரசு தாவரவியல் பூங்கா – ஊட்டி
தாவரவியல் பூங்காவில் கண்ணை கொள்ளை கொள்ளும் வண்ணம் விதவிதமான மலர்கள், மரவகைகள், அரிதான தாவரங்கள், வித்தியாசமான கள்ளி வகைகள் காணப்பட்டது. அதில் எனக்கு மிகவும் பிடித்தது கள்ளி வகைகள் தான். புகைப்படங்கள் எடுப்பதற்க்கு நல்ல இடமாக அமைந்தது.

தாவரவியல் பூங்காவிலிருந்து வரும் வழியில் திபெத்தியன் மார்க்கெட் இருந்தது. திபெத்தியன் கலாச்சார பொருள்கள் ஏராளமாக காணப்பட்டது. நானும் ஒரு சில பொருள்கள் வாங்கி வந்தேன்.
அரசு ரோஜா தோட்டம் – ஊட்டி
அடுத்ததாக ஊட்டியில் அனைவரும் சொல்ல நான் கேள்விபட்ட இடமான ரோஸ் கார்டனுக்கு தான் சென்றோம். ரோஸ் கார்டனில் அப்பொழுது தான் கோடைகால சீசனிற்க்காக ஒரு சில பகுதிகள் தயார் செய்யபட்டு கொண்டிருந்தது, இருப்பினும் அங்கு பலவிதமான வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குழுங்கியது. ஒவ்வொரு மலருக்கும் தனித்தனியே பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

படகு இல்லம்
பின்பு மதிய உணவை முடித்து கொண்டு நாங்கள் தங்கும் அறையை நாடி சென்றுவிட்டோம்.
சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மாலையில் நாங்கள் இருந்த இடத்தில் இருந்து படகு இல்லம் அருகில் இருந்ததால் நடை பயணமாக சென்றோம். அந்த மாலை வேளையில் குளிர்ந்த சூழலில் நடை பயணமாக சென்றது எனக்கு மகிழச்சியாக இருந்தது.
அந்தி வேளையில் அந்த ஓடைநீரும், குளிர்ந்த காற்றும் மனதிற்க்கு இதமாக இருந்தது.
இந்த அவசரமான சூழலில் இந்த நடை பயணம் எனக்கு சற்று அமைதியை கொடுத்தது. படகு இல்லம் அருகிலேயே குதிரை சவாரியும் இருந்தது. எனக்கு குதிரை என்றால் பயம் அதனால் நான் செல்லவில்லை.
ஆனால் மறுபடியும் சென்றால் கண்டிப்பாக குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று இப்பொழுது முடிவு எடுத்துக்கொண்டேன்.
நாங்கள் தங்கி இருந்த இடத்திறக்கு சிறு தொலைவில் மார்க்கெட் ஒன்று இருந்தது. அங்கு சென்று சாக்லேட் உடன் இன்னும் சில பொருள்கள் வாங்கினோம். அன்றைய இரவு ஊட்டி குளிரிலும், பனி மூட்டங்களுடன் இனிமையாக கழிந்தது.

இரண்டாம் நாள் காலையில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து அழகான இளையராஜா பாடலும், ஊட்டி குளிருக்கு ஏற்றவாறு ஒரு டீ உடன் தொடங்கியது. இப்பொழுதும் அந்த பாடல் எங்கு ஒலித்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஊட்டி பேருந்து நிலையம் மட்டுமே.
இரண்டாம் நாள் முதலில் நாங்கள் சென்றது ஊட்டி மரவியல் பூங்கா தான். போற போக்கில் நாங்கள் சென்ற இடம் தான் அந்த பூங்கா. ஊட்டியில் எங்கு சென்றாலும் வண்ணமயமான மலர்கள், வானூயர்ந்த மரங்கள் என அனைத்தும் கண்னை கவரும் வண்ணம் காட்சி அளித்தது.
கர்நாடகா கார்டன்
பின்பு கர்நாடகா கார்டன் சென்றோம். அங்கு தேயிலை தோட்டங்களும், தொங்கும் பாலமும் கண்டு கழித்தோம். அந்த மதிய வேளையில் மிதமான வெயிலில் தேயிலை தோட்டங்கள் அழகாக காட்சியளித்தது.

தொட்டபெட்டா மலைச்சிகரம்
எங்கள் ஊட்டி பயணத்தின் இறுதியாக நாங்கள் சென்ற இடம் தான் தொட்டபெட்டா மலைச்சிகரம். தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் வழி எல்லாம் பைன் மரக்காடுகள் தான் காட்சி அளித்தது. தொட்டபெட்டா மலைச்சிகரத்திலிருந்து பார்க்கும் பொழுது மலைகளின் அழகை காண இருவிழிகள் போதாது என தோன்றியது.
அடர்ந்த பனியும், வானை தொடும் அளவிற்க்கு வளர்ந்த மரங்கள், மேகங்கள் மலை மீது தவழ்ந்தது சென்ற காட்சி மனதிற்க்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொட்டபெட்டா மலைச்சிகரத்திலிருந்து எங்கு பார்த்தாலும் பசுமையே காணப்பட்டது. மலைச்சிகரத்திலிருந்து அந்த வானவெளியை காணும்போது மனதிற்க்குள் ஒரு வித அமைதியான நிலை ஏற்பட்டது. தேயிலை தோட்டங்களும், பைன் மரங்களும், குளிரும், பனியும், மலைச்சிகரங்களும் பார்த்து கொண்டே இருக்கலாம்.

இரண்டு நாள் பயண நினைவுகளை அசை போட்டவாரே மேட்டுபாளையத்திலிருந்து சென்னை நோக்கி பயணித்தேன். இவ்வாறாக இரண்டு நாள் ஊட்டி பயணம் இனிதே முடிவடைந்தது. ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நான் மீண்டும் செல்வேன் ஊட்டியின் எழில் கொஞ்சும் அழகை காண்பதற்காகவே.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.