
L0தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எலிமினேடு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. இவர் 5 மாதங்களுக்கு முன்பு ஐவிஎஃப் மூலம் கருத்தரித்திருக்கிறார்.
கடந்த மாதம் மருத்துவ பரிசோதனைக்காக விஜய லட்சுமி மருத்துவமனை சென்றபோது, கீர்த்தியின் கர்ப்பபை தளர்ந்திருப்பதை கவனித்த மருத்துவர் ரெட்டி, அவருக்கு அதற்கேற்ற தையல் சிகிச்சை அளித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:00 மணி அளவில் கீர்த்திக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அந்த நேரத்தில் மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் செவிலியர்களுக்கு, மருத்துவர் ரெட்டி மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஊசி போடுவது உட்பட பல மருத்துவ நடைமுறைகளை செவிலியர்கள் வீடியோ காலில் மருத்துவர் கூறியதன்படி செய்திருக்கின்றனர்.
கீர்த்தியின் வயிற்றிலிருந்து இரட்டைக் குழந்தைகள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர் ரெட்டி வந்தபோது கீர்த்தியின் குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீர்த்தி கூறுகையில், “எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தோம். மருத்துவர் இல்லை என கூறி, மருத்துவர் தொலைபேசியில் செவிலியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவரின் அறிவுறுத்தல் பேரில் சிகிச்சையை தொடங்கினார்கள் செவிலியர்கள்.
எனக்கு ரத்தப்போக்கு தொடங்கி, என் குழந்தைகள் வெளியே வந்த பிறகுதான் மருத்துவர் அங்கு வந்தார். குழந்தைகள் இறந்து விட்டதாக அவர்கள் சொன்னார்கள். மருத்துவர் ரெட்டி என்னை பரிசோதிக்கவே இல்லை . ஏழு ஆண்டுகள் பின், கருத்தரித்து குழந்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இப்படி நேர்ந்துவிட்டது” என மனம் உடைந்து கீர்த்தி கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக கீர்த்தியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவ அலட்சிய பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.