
பிரிட்டன் இளவரசர் ஹாரி பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விருப்பம் தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
பிரிட்டன் மன்னர் சார்லஸ்க்கும் மறைந்த இளவரசி டயானாவிற்கும் பிறந்தவர் இளவரசர் ஹாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மேகன் மார்க்கல் என்ற அமெரிக்க நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹாரி. பிரிட்டன் அரச குடும்பத்தின் வெள்ளையர் அல்லாத முதல் இளவரசி என்ற பெருமையையும் மேகன் மார்க்கல் பெற்றார்.
திருமணத்திற்கு பிறகு மேகன் ஒரு நடிகை, வெள்ளையர் அல்லாதவர் என்ற காரணங்களை காட்டி அவருக்கு எதிராக அரச குடும்பத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்த பிரச்னை அரச குடும்பத்தை தாண்டி பிரிட்டன் மக்களிடையையும், ஊடகங்களிடையேயும் பரவியது.
இதனால் இளவரசர் ஹாரி 2020 ஆம் ஆண்டு தானும் தன்னுடைய மனைவி மேகன் மற்றும் குழந்தை அனைவரும் அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் தனது திருமணத்துக்கு ராணி எலிசபெத் பரிசாக தந்த சசெக்ஸ் அரண்மனையை விட்டு வெளியேறி குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். 2024 -இல் இளவரசர் ஹாரி தன்னுடைய நிறுவனத்தின் ஆண்டறிக்கையிலும் தன்னுடைய நாடாக அமெரிக்காவை குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி பேசுபொருளாகியிருந்தது.
சில நாட்களுக்கு முன் ஹாரி பிரிட்டன் நீதிமன்றத்தில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பிரிட்டன் செல்லும் பொழுது RAVEC பாதுக்காப்பு வழங்க வேண்டும். அதற்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாக கூறியும் பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
RAVEC பாதுகாப்பு என்பது (Royal and VIP Executive Committee) பிரிட்டனில் முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு அளிக்கும் குழு. இந்த வழக்கில் அரச குடும்பத்தில் இருந்து விலகியவர்களுக்கு RAVEC பாதுக்காப்பு வழங்க முடியாது. பொது மனிதர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும். மேலும் அரசு பாதுகாப்பு சேவையை தனியாக வாங்க முடியாது என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் தற்போது இளவரசர் ஹாரி பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நான் என் குடும்பத்துடன் இணைய விரும்புகிறேன். என் மனைவியையும், குழந்தைகளையும் பிரிட்டன் அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன். வாழ்க்கை என்பது விலை மதிப்பற்றது. சண்டையிடுவதில் இனி எந்த பலனும் இல்லை.
என் அப்பா (மன்னர் சார்லஸ்) இன்னும் எவ்வளவு காலம் வாழ்வார் என தெரியாது. பாதுகாப்பு காரணங்களால் அவர் என்னிடம் பேசுவதில்லை. மீண்டும் குடும்பத்துடன் இணைவது நன்றாக இருக்கும் என நம்புகிறேன். அதை அவர்கள் விரும்புகிறார்களா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். நான் பிரிட்டனை மிஸ் பண்றேன், என் நாட்டை மதிக்கிறேன், எப்பொழுதும் நேசிக்கிறேன். என் குழந்தைகளுக்கு அவர்களின் தாய் நாட்டை காட்டவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என உருக்கமாக பேசியிருக்கிறார்.