
சென்னை போரூர் அருகே உள்ள சமயபுரம், ஸ்ரீராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மகன் மோனிஷ் (6). இவன் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மோனிஷ் திடீரென அலறினார். அதைக்கேட்டு வெங்கடேசனின் குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது மோனிஷை நாய் ஒன்று கடித்துக் கொண்டிருந்தது.
நாயிடமிருந்து தப்பிக்க மோனிஷ் அங்கிருந்து ஓடியபோது தவறி விழுந்ததில் அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் நாய் அவனை விடாமல் விரட்டி மோனிஷை கடித்தது. உடனடியாக நாயை விரட்டி விட்டு மோனிஷை வெங்கடேசனின் குடும்பத்தினர் காப்பாற்றினர். பின்னர் அவனை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் மோனிஷ் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு நான்கு தையல்கள் போடப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மோனிஷின் குடும்பத்தினர் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் சிறுவன் மோனிஷை கடித்தது பக்கத்து வீட்டு நாய் எனத் தெரியவந்திருக்கிறது. அதனால் நாயின் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இந்தநிலையில்தான் விருகம்பாக்கத்தில் சிறுவன் மோனுஷை நாய் கடித்திருக்கிறது. அதனால் நாயின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.