நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர்,  மே 4-ம் தேதி அவரது வீட்டிற்கு பின்புறமுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழுத்து, கைகள், கால்கள் மின் வயரால் கட்டியும், வயிற்றில் கடப்பா கல் கட்டப்பட்ட நிலையிலும் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் மேற்பார்வையில், 11 தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸார் முடிவுக்கு வரமுடியாமல் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் தோட்டம்

அதிர்ச்சியை கிளப்பிய கடிதம்

இந்த நிலையில் ஜெயக்குமார், கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதியிட்டு எழுதியதாக ஒரு கடிதத்தை அவரது உறவினர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்தக் கடிதத்தில், தனக்கு பலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தான் சந்தித்த பல்வேறு பிரச்னைகள், பணம், நிலம் தொடர்பான தகராறுகளில் தன்னை மிரட்டியவர்கள், பணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பணம் கொடுக்கல், வாங்கல் வரவு, செலவுகள் குறித்த விபரங்கள் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

மேலும் அந்த கடிதங்களில், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததால் தமிழக அரசியல் வட்டாரத்தில் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த கடிதத்தில் இடம்பெற்றிருந்த நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அத்துடன் ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை சிபிசிஐடி அலுவலகம்

சி.பி.சி.ஐ.டி-க்கு கைமாறிய வழக்கு

190 பேருக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 170 பேர் வரை நேரில் ஆஜராகினர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினர் பலமுறை தடயங்களை சேகரித்தனர். தடயங்களை பல்வேறு கட்டங்களாக அறிவியல்பூர்வ ஆய்வுக்கும் உட்படுத்தியிருந்தனர். கரைச்சுத்துப்புதூர் பகுதியில் சுமார் 10 கி.மீ சுற்றளவில் பொருத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமிராக்களில் குறிப்பிட்ட நாட்களில் பதிவான காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

ஆனாலும் வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைவிட்டதா காங்கிரஸ்?

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தடயங்களையும் அவர்கள் பல்வேறு கட்டங்களாக ஆய்வுக்கு உட்படுத்தினர். கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்கள், ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் இரண்டாம் முறையாக விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா?, தற்கொலை செய்து கொண்டாரா?, அவர் எவ்வாறு இறந்தார்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஓராண்டாகியும் துப்பு துலங்கவில்லை.

அவரது மர்ம மரண வழக்கில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் அப்படியே இருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, தொடக்கத்தில் காங்கிரஸார் போராட்டங்களை நடத்தினர்.

ஜெயக்குமாரின் தோட்டத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு

நாட்கள் செல்லச் செல்ல வழக்கு விசாரணையை அவர்களும் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ஜெயக்குமாரின் மர்ம மரண வழக்கு குறித்து விரைவில் விசாரணை நடத்தி முடிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டதாக அக்கட்சியினரே குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஜெயக்குமார் உயிரிழந்து ஓராண்டாகியும் எவ்வித முன்னேற்றமும் காணப்படாததால் சி.பி.ஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *