பள்ளிக்கூட தொழிலதிபர்களின் அலட்சியத்தால், கவனக்குறைவால், ஆள்வோர்கள் மற்றும் அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் வெறியால் பள்ளிக்கூட வளாகங்களில் குழந்தைகளின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. சமீபத்திய பலி… மதுரை, மழலையர் பள்ளிக்கூடத்தின் நான்கு வயது பிஞ்சு.

அந்தப் பள்ளிக்கூட வளாகத்திலிருந்த எட்டு அடி ஆழமுள்ள தண்ணீர்த் தொட்டி மூடப்படாமல் இருந்துள்ளது. குழந்தை, அந்தப் பகுதிக்குச் சென்றதையும் பணியில் இருந்த ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள் யாருமே கவனிக்கவில்லை. ஆக, முழுக்க முழுக்க இது அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலையே!

பள்ளிக்கூட தாளாளர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என ஏழு பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த வளாகத்தில் சில விதிமீறல்கள் இருப்பதும், அதுவும் இப்போதுதான் தெரியவந்ததால், பள்ளிக்கூடத்துக்கு சீல் வைத்துள்ளனர்.

இது, முதல் இழப்பு இல்லை என்பது, கோபத்தின் வெப்பத்தை அதிகரிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம், தனியார் ஆரம்பப் பள்ளிக்கூட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அப்போதே, பள்ளிக்கூட வளாகங்களின் பாதுகாப்புக் குறித்துக் கமிட்டியெல்லாம் போட்டு, அறிக்கையெல்லாம் வாங்கி ஏதேதோ செய்தது அரசு. ஆனால், சென்னை, முடிச்சூரில் தனியார் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து குழந்தை பலி; விக்கிரவாண்டி தனியார் பள்ளிக்கூட கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு… இன்று வரையிலும் கொடூரங்கள் தொடர்கின்றன.

தனியார் மற்றும் அரசுப் பள்ளிக்கூடங்களில் சீரான இடைவெளிகளில் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பள்ளிக் கல்வித்துறை; கட்டடங்களுக்கு அனுமதி கொடுக்கும் நகர்ப்புற திட்டமிடல்துறை; பள்ளிக்கூட வாகனங்களுக்கு அனுமதி கொடுக்கும் போக்குவரத்துத்துறை இவர்களை யெல்லாம் கண்காணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் என… அனைத்து இடங்களிலும் லஞ்சம்… லஞ்சம்… லஞ்சமே. எதிர்விளைவாக, குழந்தைகளின் பாதுகாப்பு… கோப்புகளில் மட்டுமே ‘சரி’ செய்யப்படுகின்றன.

கல்விக்கூட வளாகங்களை, பயிலும் குழந்தைகளின் உயிருக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தவறும் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின் பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குற்றவாளிகளே. தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதேசமயம், இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கு தூண்டிய அல்லது உடந்தையாக இருக்கும் கல்வித்துறை, கட்டட அனுமதித்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் என அத்தனை பேருமே குற்றவாளிகள்தான். இவர்களையும் தப்பவிடக் கூடாது. அதற்கு தகுந்தாற்போல.. முதல் தகவல் அறிக்கை தொடங்கி, நீதிமன்றம் வரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள்… மதுரை மழலையர் பள்ளியில் நடந்திருக்கும் இந்தக் கொடூரக் கொலையிலிருந்தே துவக்கப்பட வேண்டும்.

உரக்கக் குரல் கொடுப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *