நீண்டகால தீவிர ரசிகர் தலைக்கு துப்பாக்கியால் குறி பார்த்த தவெக தலைவர் விஜய்யின் பாதுகாவலரின் செயல், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்

கொடைக்கானல் பகுதியில் நடந்துவரும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் விமானம் மூலம் கடந்த 1-ம் தேதி மதுரைக்கு வந்தார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “படப்பிடிப்புக்குச் செல்வதால் தொண்டர்கள் யாரும் வாகனத்தில் பின் தொடரவோ, வாகனத்தின் மீது ஏறவோ இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கவோ வேண்டாம்” என அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மதுரையில் அவரை வரவேற்க ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் திரண்டு வந்து விமான நிலையத்தை திக்குமுக்காட வைத்தனர். அங்கிருந்து நான்குவழிச் சாலை வரை 2 கிலோ மீட்டர் தூரம் விஜய் மீது பூக்களை தூவிக்கொண்டு உடன் சென்றனர். அதனால் ரோடுஷோ போல விஜய் பயணித்தார்.

கொடைக்கானல் படப்பிடிப்பு பணிகள் முடிந்து நேற்று (மே 5) சென்னைக்குச் செல்ல மதுரை விமான நிலையம் வந்தபோதும், அவரைக் காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

விஜய்

அப்போது பாதுகாவலர்களுடன் காரிலிருந்து இறங்கி வந்த விஜய்க்கு துண்டு அணிவிக்க ஒரு ரசிகர் வேகமாக வந்தார். அதைப் பார்த்த பாதுகாவலர்களும், பவுன்சர்களும் அவரைத் தடுத்தனர். அப்போது பாதுகாவலர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து, அந்த ரசிகரின் தலையை நோக்கி குறி வைத்துள்ளார். அப்போது அந்த பரபரப்பில் இதை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், அங்கு நடந்தது வீடியோவில் பதிவாகியுள்ளதைப் பார்த்த ஊடகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

`நடிகர் என்பதைக் கடந்து அரசியல் தலைவராகியுள்ள விஜய், தனக்கு துண்டு போட வந்த ரசிகரின் தலையில் துப்பாக்கி வைக்க பாதுகாவலருக்கு உத்தரவிட்டுள்ளாரா?’… `இவர் எப்படி தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை நேரடியாகச் சந்திப்பார்? இது போன்ற சம்பவம் எந்த தலைவர் முன்னிலையிலும் இதுவரை நடந்ததில்லை’ என்று பொதுமக்கள் பொங்கி எழும் வகையில், அந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரசிகரின் தலையில் துப்பாக்கி

இந்த நிலையில் துப்பாக்கி தலையில் வைக்கப்பட்ட அந்த ரசிகர் மதுரையைச் சேர்ந்த இன்பராஜ் என்றும், இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதாகவும், விஜய்க்கு எப்படியும் சால்வை அணிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்து விஜய் வந்ததும் சால்வை அணிவிகக சென்றபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *