
சிறைச்சாலையாக இருந்து பின்னர் மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் அல்காட்ராஸ் “தீவு சிறையை” மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் வன்முறை குற்றவாளிகள் அதிகமாகி உள்ளனர். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்ட ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகள் இந்த தீவு சிறையில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.
அல்காட்ராஸ் தீவு சிறை
அல்காட்ராஸ் ஒரு கடற்படை பாதுகாப்பு கோட்டையாக இருந்துள்ளது. அதன் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு ராணுவ சிறைச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறையில் இருந்த ராபர்ட் ஸ்ட்ரோட் என்ற ஆயுள் கைதி, தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே பறவையின்மீது ஆர்வம் கொண்டு பின்னர் பறவையியல் துறையின் நிபுணராக மாறியிருக்கிறார். இவர் பற்றிய திரைப்படம் 1962 ஆம் ஆண்டு வெளியானது. பேர்ட்மேன் ஆஃப் அல்காட்ராஸ் என்ற இந்த படத்தின் மூலம் அல்காட்ராஸ் சிறைச்சாலை பிரபலமானது.
1963 ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை மூடப்பட்டு தற்போது ஒரு சுற்றுலா தலமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிகோ விரிகுடாவில் அமைந்துள்ள இந்த தீவு மோசமான சிறைச்சாலையாக இருந்தாலும், அது மூடப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் அதனை ஆர்வமுடன் கண்டுகளிக்கின்றனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது சிறைச்சாலை பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம். அல்காட்ராஸ் தீவு ஆண்டுதோறும் பல லட்சம் பார்வையாளர்களை வரவேற்கிறது. இந்த அல்காட்ராஸ் சிறைச்சாலையை தான் மீண்டும் திறந்து விரிவுபடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.