தூத்துக்குடி, சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  பச்சைமால். 61 வயதான  இவர்,  சித்தா மருத்துவராக  பணிபுரிந்து வருகிறார்.  சிறு வயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். 

நீட் தேர்வில் வெற்றி பெற்று சித்த மருத்துவத்துடன் இணைந்து அலோபதி மருத்துவத்தையும் சேர்த்து தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்களை குணமாக்குவதை  லட்சியமாகக் கொண்டுள்ள அவர், நேற்று நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார்.

பச்சைமால்

இதுகுறித்து சித்த மருத்துவர் பச்சைமாலிடம் பேசினோம், ”தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள  பேட்டு துரைசாமிபுரம் தான் எனது சொந்த ஊர். பின் தங்கிய இந்த கிராமப்  பகுதியில் இருந்து அரசுப் பள்ளியில் படித்தேன். குடும்ப சூழல் காரணமாக என்னால் மருத்துவம் படிக்க முடியாததால், சித்த மருத்துவம் படித்தேன். தனது வெகு நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். கடந்த 6 மாதங்களாக தீவிரமாக படித்தேன். நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து நீட் தேர்வு எழுதுவதாக தெரிவித்தார்.

மேலும் சித்த மருத்துவர் பச்சைமால் கூறுகையில், “இந்த 61 வயதிலும் என்னால் நீட் தேர்வு எழுதும் போது, தற்போது நீட் தேர்வு எழுதக்கூடிய இளம் மாணவர்கள் தேர்வில் ஒரு முறை தோல்வி அடைந்தவுடன் தவறான முடிவு எடுத்து விடுகிறார்கள். மனம் தளர்ந்து விடுகிறாரக்ள்.

நீட் தேர்வில் பெரும்பாலும் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் உள்ளது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதால், தமிழக அரசு தனது  பாடத்திட்டத்தை, நீட் போன்ற தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும்  வகையில் கூடுதல் தரமானதாக மாற்ற வேண்டும்.

தூத்துக்குடி நீட் தேர்வு மையத்தின் முன் மாணவர்கள்

அதேபோல, மத்திய அரசும் இந்த நீட் தேர்விற்கு வயது வரம்பை கொண்டு வர வேண்டும். தான் தற்போது 61 வயதில் நீட் தேர்வு எழுதினாலும் தான் மருத்துவத்துறையில் இருப்பதால் தேர்வுக்கு என்னால் தயார் செய்ய முடிகிறது.  இதேபோன்று  மற்றவர்களால் செய்ய முடியாது. எனவே, நீட் தேர்வுக்கு வயது வரம்பை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். நான் நீட் தேர்வில் வெற்றி பெற்று சித்த மருத்துவத்துடன் இணைந்து அலோபதி மருத்துவத்தையும் சேர்த்து தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்களை குணமாக்குவதே தனது லட்சியம்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *