முக்கோடித் தேவதைகள் தீர்த்தமாடி முன்னை வினை தீர்த்த திருக்கோடிக்கா! தீர்த்தவாரித் திருவிழா மற்றும் ரிஷபவாகனக் காட்சி சித்திரை 27, சனிக்கிழமை – 10.05.2025

திருக்கோடிக்கா

பொதுவாக  திருத்தலங்களைத் தரிசிக்கச் செல்கையில் அவற்றின் தொன்மைச் சிறப்பினை விளக்கிடும் பொருட்டு ‘மூர்த்தி – தலம் – தீர்த்தம் ‘ என்று சொல்வது வழக்கு.  இம்மூன்றாலுமே சிறப்புடைய தலங்கள் என்றால் இன்னும்  கூடுதல் விசேஷம். அத்தகு தலங்களில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள த்ரிகோடி எனப்படும் திருக்கோடிக்காவல்.  இப்புண்ணிய தலத்தின் பெருமைகளைச் சற்று சிந்திக்கலாமா..?!

‘கா’ என்றால் சோலை. முற்காலத்தில்

எழில் நிறைந்த சோலைகளாக விளங்கியிருந்த தொன்மையான தலங்கள்  ஐந்து;

01.  திரு ஆனைக்கா

02. திரு கோலக்கா

03. திரு நெல்லிக்கா

04. திரு குரக்குக்கா

05. திரு கோடிகா

இவற்றை ‘பஞ்ச ‘கா’ க்ஷேத்ரங்கள்’ என்பர். இவற்றுள் ஒன்றுதான்  ‘திரு-கோடிகா’ . பேச்சு வழக்கில் திருகோடிக்காவல் என்றே வழங்கப்படுகிறது. 

கா – சோலை; கோடி- வளைவு

‘வளைவில் அமைந்திருக்கக் கூடிய  சோலை’ என்பது இதற்குப்  பொருள்.

தென்னிந்திய நதிகள் எல்லாம் தெற்கு நோக்கிப் பாய்ந்தோடி சமுத்திரத்தில் கலந்து விடுவது இயல்பு. சோழ தேசத்து காவிரி நதியின் போக்கும் அத்தகையதே. ஆயினும், இப்பகுதியில் குறிப்பிட்ட தொலைவு மட்டும்  காவிரி வழக்கமான தன்போக்கிலிருந்து சற்று நன்றாகவே வளைந்து உத்திர (வடக்கு) பாகம் நோக்கிப் பாய்ந்து மீள்வது இயற்கையின் அதிசயம்.இதனால் இப்பகுதியில் தவழும் காவிரியானவள்  கங்கை நதிக்குச் சமமானவளாக ‘உத்திரவாஹினி’ என்கிற பெயரால் போற்றப் படுகின்றாள். 

திருக்கோடிக்கா

பொதுவாக ஒரு ஊருக்கு நாற்புர எல்லைகள் இருப்பது வழமை. ஆனால் கோடிகாவானது  மூன்று பக்க எல்லைகளுடன் கூடிய தலமாக இயற்கையாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விசேஷம். இத்தகு பூகோள அமைப்பின் காரணமாகவேஇதற்கு வடமொழியில் ‘த்ரிகோடீ ‘ என்கிற பெயர் ஏற்பட்டது.  

கோடிகா உடையவரின் திருநாமம் அழகுத் தமிழில் திருக்கோடீஸ்வரர்.  இந்த  கோடி என்கிற பதம் எண்ணிக்கையின் அடிப்படையில் குறிக்கப்படுவது அன்று. மூன்று கோடி மந்திரதேவதைகளுக்கு சிவபெருமான்  சாயுஜ்ய முக்தி அளித்த தலம் இது.   அதன் காரணமாக இத்தலத்து உடையவருக்கு திருக்கோடீஸ்வரர் என்கிற திருநாமம் உண்டாயிற்று என்பதும் காரணம் என்கிறார்கள். 

திருக்கோடிக்கா

அம்மை முப்புவன வடிவாம்பிகை என்கிற திரிபுரசுந்தரி.  இத்தலத்தில் உடலை உதிர்க்கிற ஜீவர்களுக்கு சிவபதத்திற்கு வழிகாட்டி அருளுகிற வண்ணமாய் தெற்கு நோக்கி அருளுகிறாள் என்பது ஐதீகம். சாக்த உபாசகர் ஸ்ரீ பாஸ்கராச்சார்ய சுவாமிகளுக்கு அருளியதன் மூலம்  லலிதா சஹஸ்ரநாமத்திற்கு உரை செய்வித்த புண்ணியவதி இவள்.  தூர்வாஸ முனிவருக்குக் காட்சி கொடுத்து ஆட்கொண்டவள்.  வைணவ அடியார்களுக்கு ஸ்ரீ திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகக் காட்சி அளித்த ஐதீகம்.

இத்தலத்து விநாயகரையும்; வடுகரையும் துர்வாச முனிவர் பூஜித்துள்ளார்.  அகத்திய முனிவர் அவர் வழிபட்ட அகத்தீஸ்வரருடன் சுற்றாலையில் அருளுகின்றார். யமதருமன் மற்றும் சித்திரகுப்தன் ஆகிய இருவருக்கும் தனித்த சந்நிதிகள் உண்டு.  சோழர்குல சிவஞானச்செல்வி செம்பியன் மாதேவியாரின் முதல் திருப்பணிக்குட்பட்ட கற்றளி இது என்கிற வரலாற்றுப் பெருமை உடையது.  ஏராளமான மன்னர் காலத்துக் கல்வெட்டுகளும்; சிற்பங்களும் நிரம்பியுள்ள சரித்திரப் பொக்கிஷம் இந்த திருக்கோடிகா. 

புராண காலத்தில் பிரம்புக்காடாக இருந்தமையால் வேத்ரவனம் என்றழைக்கபட்ட தலமிது.  சிவபெருமானின் ஆக்ஞையின்படி,  நந்தி தனது கொம்பினால் பூமியைக் கீறிட, அதிலிருந்து  பிரவாகித்த பாதாளகங்கை ‘சிருங்கோத்பவ புஷ்கரணி’ (சிருங்கம் -கொம்பு) என்று அழைக்கப்படுகிறது.  இது தற்பொழுது ஆலயத்திற்கு அருகிலேயே  சிறு குளமாக அமைந்துள்ளது. மூன்றுகோடி மந்திர தேவதைகள் நீராடி ரிஷபாரூடனர் தரிசனமும் சாபவிமோசனமும் பெறுதற்குக் காரணமாக அமைந்த தீர்த்தம் இதுதான். 

 விசேஷ காலங்களில் உத்திரவாகினிக் காவிரி மற்றும் சிருங்கோத்பவ புஷ்கரணி ஆகிய  இவ்விரு தீர்த்தங்களிலுமே கோடீஸ்வரர் தீர்த்தம் அளித்தருளுவது இத்தலத்தில் மட்டுமே காண இயலுகிற விசேஷம்.  இவ்விரு இடங்களிலும் நீராடி  கோடிகா நாதரை வழிபடுவோருக்கு யமவாதனை இல்லை என்பது உறுதி.  அத்துடன் முக்காலங்களிலும் உண்டாகும் பாபங்கள் நசிந்து விடும் என்பதோடு யமதண்டனையும் கிடையாது  என்பது  சிவமகாபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல். 

தவிர,  காலசம்ஹாரத்தினால் தனது சக்தியழிந்து ஒடுங்கியிருந்த யமதருமன் சித்திரகுப்தனுடன் சிருங்கோத்பவ புஷ்கரணியில் நீராடி வழிபட்டபின்  விமோசனம் பெற்றதும் இத்தலத்தில்தான். இந்த ஐதீகத்தின் அடிப்படையில்தான் சித்திராபௌர்ணமியைப் பிரதானமாகக் கொண்டு கோடிகா பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக  நிகழ்த்தப்படுகிறது. 

திருக்கோடிக்கா

மூன்று கோடி மந்திர தேவதைகளின் சாயுஜ்ய முக்திக்கு அருளிய திரிகோடி லிங்கேஸ்வரர்,  சண்டபீடேஸ்வரர், சிவகாமி உடனாய நடராஜர் கற்றிருமேனிகள், பிறவிக்கடன் தீர்த்து அருளிடும் கரையேற்று விநாயகர், துர்வாச முனிவர் பூஜித்த வடுக பைரவர், அர்த்த மண்டல பிரம்மா, சிவலிங்கத்தினை சிரசில் தாங்கிய   பாலசனீஸ்வரர் என இத்தலத்தில் உள்ள புராணத் தொடர்புடைய  சந்நிதி விசேஷங்கள் ஏராளம். 

சித்ரா பெளர்ணமி அன்று இத்தலத்தில் நடைபெறும்  தீர்த்தவாரி நிகழ்வைத் தரிசிப்போருக்கு சகல பாபங்களும் நசிந்து யமதண்டனை அகலுவதாக ஐதீகம்.  சித்திரைத் தீர்த்தவாரி மற்றும் ரிஷபவாகனக் காட்சி சித்திரை 27,  சனிக்கிழமை – 10.05.2025

எப்படி செல்வது? கும்பகோணம் – மயிலாடுதுறை இடையில் 17 கி.மீ தொலைவில் பூம்புகார் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *