கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற சாமியாரின் சமாதியில், அவரது நினைவு நாளில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மனித நேயத்திற்கு எதிரானது மட்டுமல்ல… அடிப்படை சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது! 

இதற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், `ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினர் மட்டும்தான் இப்படி எச்சில் இலையில் உருள வைக்கப்படுகிறார்கள், இது மனித நேயத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் அடிப்படை சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

எனவே இந்த மோசமான சடங்கு முறையை தடை செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த நடைமுறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

கரூர்

இந்த தடை உத்தரவுக்கு எதிராக, நெரூர் மடம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நெரூர் மடம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், `சடங்கில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். எனவே இந்த சடங்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், `எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில், குக்கே சுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெற்று வந்த இதே போன்ற எச்சில் இலையில் உருளும் சடங்கை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. மனிதத் தன்மையற்ற இதுபோன்ற சடங்குகளை அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும்’ என வாதங்களை முன் வைத்தார்.

உத்தரவை எங்களால் மீற முடியாது!

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் இதே போன்ற நடைபெற்று வந்த சடங்கை தடை செய்த உத்தரவை சுட்டிக்காட்டி, `அந்த உத்தரவை எங்களால் மீற முடியாது. மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்து தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

எனவே அதில் நாங்கள் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை. எனவே சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை என்பது தொடரும். மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கிறோம்’ எனக் கூறி, ஏற்கனவே இதே போன்று கோரிக்கைகளோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்ற மனுக்களோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.

நெரூர் மடத்தில் எச்சில் இலையில் உருளும் சடங்கு இந்த மாதம் நடைபெற இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அந்த சடங்கு நடைபெற இயலாது என்பது உறுதியாகி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *