
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக தமிழ் மாதம் 1-ம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அப்போது பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
வைகாசி மாதத்திற்கான மாதாந்திர பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறக்கிறது. 19-ம் தேதி இரவு 10 மணிவரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வரும் 18-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கேரள போலீஸ் மற்றும் சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசுக்கும் அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி கேரளா வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மூ அன்று அல்லது 19-ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில், 14-ம் தேதி மலை 5 மணி முதல் 17-ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியும்.
18 மற்றும் 19-ம் தேதிகளில் முன்பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்தவில்லை. இந்த இரண்டு நாள்களில் எதாவது ஒருநாள் ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்பது உறுதி ஆகியுள்ளது.
வரும் 18-ம் தேதி கோட்டயம் குமரகத்தில் ஜனாதிபதி தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலையில் உள்ள தேவசம்போர்டு விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் 18-ம் தேதி சபரிமலை செல்லும் ஜனாதிபதி அங்கு தங்கிவிட்டு மறுநாள் திரும்பிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பம்பாவில் இருமுடி கட்டி அங்கிருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக காரில் சபரிமலை செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலைக்கு தரிசனத்துக்காக ஜனாதிபதி வருகைபுரிவது இதுதான் முதல்முறையாகும்.