
இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு ‘தலைவன் தலைவி’ எனப் பெயரிட்டு கடந்த மே 3-ம் தேதி டைட்டில் டீசர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த டைட்டில் டீசரும் தற்போது மக்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. படத்தில் புரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
நித்யா மேனனுடன் அழகான காதல் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம்.
முதல் முறையாக சந்தோஷ் நாராயணன்!
இது கூடவே, சில ஆக்ஷன் டச்சும் இருப்பதாக டைட்டில் டீசரின் மூலம் தெரிகிறது. விஜய் சேதுபதி படத்தில் புரோட்டா மாஸ்டராக நடிப்பதால் படத்திற்கும் முதலில் ‘புரோட்டா மாஸ்டர்’ என தலைப்பு வைக்க திட்டமிட்டிருந்தார்களாம்.
அதன் பிறகு இப்போது வைத்திருக்கும் டைட்டிலுக்கு டிக் அடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியிடம் நமக்கு மிகவும் பிடித்தமான அதே நகைச்சுவை தொனியும் படத்தில் இருக்கிறதாம்.
படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இதை தாண்டி, பாண்டிராஜுடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்து இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் ரிலீஸ் குறித்தான விவரங்களும், அடுத்தடுத்த அப்டேட்ஸ்களும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஏஸ்’ திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘டிரெயின்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளும் நடந்து வருகிறது.
‘காக்க முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் இவர் நடிக்கும் வெப் சீரிஸின் ஆரம்பகட்டப் பணிகளும் தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.