
மகாராஷ்டிராவில் அதிக நாட்கள் துணை முதல்வராக இருந்தவர் என்ற பெருமை அஜித் பவாரை தான் போய் சேரும். எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் அஜித்பவாரால் அப்பதவிக்கு வரமுடியவில்லை. மும்பையில் தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னாள் முதல்வர்கள் நாராயண் ரானே, அசோக் சவான் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அஜித் பவாரும் கலந்து கொண்டார்.
அதிர்ஷ்டம் இல்லை
இக்கூட்டத்தில் பேசிய அஜித் பவார், `முதல்வராக வேண்டும் என்பது தனது ஆசை’ என்றும், `ஆனால் அந்த வாய்ப்பைத் தவறவிட்டதாகவும், தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும், இன்னும் அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்’ என்றும் அவர் கூறினார். 1999ம் ஆண்டு அஜித் பவாருக்கு முதல்வராகும் வாய்ப்பு கிட்டியது.
ஆனால் அப்போது விலாஸ் ராவ் தேஷ்முக் முதல்வராகிவிட்டார். 2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட தேசியவாத காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே இம்முறை அஜித் பவார் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவாரிடம் பேசி தங்களது கட்சிக்கு முதல்வர் பதவியை வாங்கிக் கொண்டார்கள். காங்கிரஸ் கட்சி முக்கிய இலாகாக்களை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. இதனால் முதல்வர் பதவி கிடைக்காமல் போய்விட்டது. இதை எதிர்த்து சரத் பவாரிடம் அஜித் பவாரால் கேள்வி கேட்க முடியாமல் போய் விட்டது.
ஆனால் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது தேசியவாத காங்கிரஸ் செய்த தவறு என்று அஜித் பவார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு அஜித் பவாருக்கு அப்பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பின்னர் தெரிவித்திருந்தனர். அதன் பிறகு அஜித்பவாரால் முதல்வர் பதவி குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
வழக்கம் போல் துணை முதல்வர் பதவி மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தான் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை 2023-ம் ஆண்டு இரண்டாக உடைத்து விட்டார். அதோடு கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார். ஆனால் இப்போது பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதால் முதல்வர் பதவி என்பது அஜித்பவாருக்கு நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது.!