நவீன உலக வரலாற்றை நான்கு பாகங்களாக எழுதிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம், ‘புரட்சியின் யுகம்: 1789-1848’ என்கிற முதல் பாகத்தை இப்படித் தொடங்குகிறார்: ‘ஆவணங்களைவிட சொற்கள் பல நேரங்களில் உரத்துப் பேசும் சாட்சிகளாகின்றன.’

அக்காலகட்டத்தில் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட, புதிய பொருள் ஏற்றம் பெற்ற சொற்கள் என ‘industry’, ‘middle class’, ‘working class’, ‘nationality’, ‘ideology’, ‘journalism’, ‘strike’, ‘capitalism’ போன்றவற்றை முன்னுரையில் அவர் பட்டியலிடுகிறார்.

கார்ல் மார்க்ஸ்

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘capitalism’ வழக்கில் வந்துவிட்டபோதிலும், 1849-1860 காலத்தில்தான் பரவலாக்கம் பெற்று அதன் கனம் கூடியது என்கிற அடிப்படையில், இரண்டாம் பாகத்துக்கு ‘மூலதனத்தின் யுகம்: 1848-1875’ எனத் தலைப்பிட்டார்; கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ வெளியானதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

தொழிற்சாலை முதலாளியம் (industrial capitalism) உருப்பெற்று விரிவடைந்த காலத்தில் வெளியாகியிருந்தாலும், செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் பெற்றிருக்கும் இன்றைய தொழில்நுட்ப முதலாளிய யுகத்தின் நெருக்கடிக் குரல்கள், ‘மூலதன’த்தின் பொருத்தப்பாட்டை எதிரொலிக்கின்றன. இந்தப் பின்னணியில், ‘மூலதனம்’ முதல் பாகத்துக்கு வெளியாகியிருக்கும் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு, 21ஆம் நூற்றாண்டின் மொழிக்குள் மார்க்ஸைக் கொண்டுவந்திருக்கிறது.

மூலதனம் முதல் பதிப்பு

முதலாளிய உற்பத்தி முறை பற்றிய பகுப்பாய்வான ‘மூலதனம்’, 1867 செப்டம்பர் 14 அன்று வெளியானது. 1846 காலகட்டத்தில் நூலின் பதிப்புப் பணிகள் ஏற்கெனவே தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில், பூரணத்துவத்தை வலியுறுத்தி, அதை மீண்டும் ஒருமுறை திருத்தாமல் வெளியிடமாட்டேன் எனப் பதிப்பாளருக்கு மார்க்ஸ் எழுதினார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1858இல், தான் பல ஆண்டுகளாக ஆய்வுசெய்த தலைப்புகள் புதிய அம்சங்களை வெளிப்படுத்தி மேலும் சிந்தனையை வேண்டியதால் பணிகள் மெதுவாக முன்னேறுவதாக மார்க்ஸ் பதிப்பாளருக்கு விளக்குகிறார்.

மூலதனம் முதல் பதிப்பு
மூலதனம் முதல் பதிப்பு

‘அரசியல் பொருளாதார விமர்சனப் பகுப்பாய்வு’ என்கிற துணைத் தலைப்பைக் கொண்டுள்ள இந்நூல், 1859இல் வெளியான ‘அரசியல் பொருளாதார விமர்சனப் பகுப்பாய்வுக்கு ஒரு பங்களிப்பு’ என்கிற நூலின் தொடர்ச்சிதான் என்றும் அந்நூலின் கருத்துகள்தாம் விரிவுபடுத்தப்பட்டு இதில் விளக்கப்பட்டுள்ளதாக முதல் பதிப்பின் முகவுரையில் மார்க்ஸ் எழுதுகிறார். ‘மூலதனம்’ என்பது பொருள் அல்ல; மாறாக பரிவர்த்தனை மதிப்பு (Exchange value) என்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சமூக உறவாக அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரம் படிகள் அச்சடிக்கப்பட்டு ஜெர்மன் மொழியில் வெளியான ‘மூலதன’த்தின் முதல் பதிப்பு விற்று முடிய ஐந்து ஆண்டுகள் பிடித்தன. ஜெர்மனியில் பரவலான வாசகர்களைப் பெறாததற்கு நூலின் கோட்பாட்டுக் கூறுகள் பெரிதும் காரணமல்ல. மார்க்ஸிய விமர்சனத்தின் முதன்மைப் பொருள்களுள் ஒன்றான செவ்வியல் அரசியல் பொருளாதாரம் பரவலாக வாசிக்கப்படவில்லை என்பதுடன் ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ போன்றோரின் முக்கியத்துவத்தை அறியாதவர்களுக்கு மார்க்ஸின் கருத்துருவாக்கத்தின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதில் சிரமம் இருந்ததே ஜெர்மானிய வாசகர்களிடம் நிலவிய சிக்கல்.

ஜெர்மானிய வாசகர்கள்|Representation images
ஜெர்மானிய வாசகர்கள்|Representation images

மார்க்ஸ் வருந்தினார்; “கார்லின் புத்தகத்தைப் பற்றி நாம் நீண்ட காலமாக வளர்த்து வந்த ரகசிய நம்பிக்கைகள் அனைத்தும் ஜெர்மானியர்களின் மௌனச் சதியால் வீணடிக்கப்பட்டன,” என்று மார்க்ஸின் மனைவி ஜென்னி வெதும்பினார். ஜெர்மானியர்கள் ‘மூலதன’த்தை முதலில் கைகொள்ளாவிட்டாலும் ரஷ்யர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

ரஷ்யப் புரட்சியின் விதைகள்

1860இல் ரஷ்யாவில் பண்ணயடிமை முறை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு ரஷ்யாவின் சமூக வளர்ச்சி குறித்த விவாதம் பல்வேறு தரப்பினரிடையே தீவிரம் பெற்றிருந்தது. அப்படியான ஒரு குழுவினரான நரோத்னிக்குகள் சமூகவியல் நூல்களைத் தீவிரமாக வாசித்துவந்தனர். மார்க்ஸை அறிந்திருந்த அவர்கள், ‘அரசியல் பொருளாதார விமர்சனப் பகுப்பாய்வுக்கு ஒரு பங்களிப்’பை வாசித்திருந்தனர். இந்தப் பின்னணியில்தான், ‘மூலதன’த்தின் வெளியீட்டை அறிந்து, அதை வாசித்த டேனியல்சன், லோபாடின், நெக்ரெஸ்குல், லியுபவின் ஆகியோர் அடங்கிய நரோத்னிக்குகள் குழு, அதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டு மார்க்ஸுக்கு 1868இல் கடிதம் எழுதியது. ஜெர்மனியில் இல்லாத வரவேற்பு ரஷ்யாவில் ஏற்பட்டிருப்பதை அறிந்து மார்க்ஸ் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார்.

பக்கூனின், லொபாடின், டெனியல்சன் ஆகியோர் மொழிபெயர்த்த ‘மூலதனம்’, தணிக்கையாளர்களிடம் சென்றது. எங்கெல்ஸின் ‘இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை’, மார்க்ஸின் ‘மூலதனம்’ தவிர பிற நூல்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய அப்போது தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில், ‘மூலதன’த்தின் ரஷ்ய மொழிபெயர்ப்பை ஆய்வுசெய்த தணிக்கையாளர்கள், “இடர்ப்பாடான, படிப்பதற்குச் சிக்கலான, கறாரான அறிவியல் படைப்பு” என முத்திரையிட்டு வெளியீட்டு அனுமதி வழங்கினர்; எனினும் மார்க்ஸின் படத்தை நீக்கச் செய்தனர்.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

இப்படியாக, ‘மூலதனம்’ முதல் பாகத்தின் முதல் மொழிபெயர்ப்பு 1872இல் ரஷ்யாவில் வெளியானது; பைபிளின் நவீன ரஷ்ய மொழிபெயர்ப்புக்கு (1876) முன்பே ‘மூலதனம்’ ரஷ்யாவில் வெளியாகியிருக்கிறது! மூவாயிரம் படிகள் அச்சிடப்பட்ட நிலையில், ஆறு வாரங்களில் 900 படிகள் விற்றன; ஒரே ஆண்டில் முழுவதும் விற்றுமுடிந்தது. ‘மூலதனம்’ தணிக்கையிலிருந்து தப்பினாலும் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் மொழிபெயர்ப்பு தப்பவில்லை என்பதிலிருந்து அதன் தாக்கத்தை அறிய முடியும்.

லெனின் தன்னுடைய 18 வயதில், தன் தாத்தாவின் வீட்டிலிருந்து ‘மூலதன’த்தைப் படித்திருக்கிறார்; ட்ராட்ஸ்கியோ 1900களில் ‘மூலதன’த்தைப் படித்திருக்கிறார். 1917 புரட்சியின் சிற்பிகள் எல்லாம், தங்கள் கருத்துகளின் ஒழுங்கமைவுக்கு மார்க்ஸை – குறிப்பாக ‘மூலதன’த்தைக் காரணம் காட்டினர்.

ஆங்கிலத்துக்கு வந்த மூலதனம்

1883இல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்; அவர் இங்கிலாந்தில் வாழ்ந்திருந்தாலும் அவரது காலத்தில் மூலதனம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. மூலதனம் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தின் பொற்காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டிருந்தது.

ரஷ்ய (மார்ச், 1872), பிரெஞ்சு (ஆகஸ்ட் 1872) மொழிபெயர்ப்புகள் வெளியாகி 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ‘மூலதனம்’ முதல் பாகம் ஆங்கிலத்தில் வெளியானது. எங்கெல்ஸ் மேற்பார்வையில், சாமுவேல் மூரும் மார்க்ஸின் இளைய மகள் எலியனாரின் கணவர் எட்வர்ட் அவெலிங்கும் ‘மூலதன’த்தின் முதல் பாகத்தை ஆங்கிலத்தில் கொண்டுவந்தனர்.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

1928இல் வெளியான ஈடன் பால் – சிடர் பால் மொழிபெயர்ப்பு, இன்று பதிப்பில் இல்லாத அளவுக்குக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 1976இல் வெளியான பென் ஃபோக்ஸின் மொழிபெயர்ப்பு, மூர் – அவெலிங் மொழிபெயர்த்த ஆங்கிலம் காலாவதியாகிவிட்ட நிலையில், மேம்பட்டிருக்கும் மார்க்ஸிய ஆய்வுகளின் பின்னணியில் புதிய மொழிபெயர்ப்புக்கான காரணங்களை முன்வைத்தது.

இந்தப் பின்னணியில்தான், தற்போது வெளியாகியிருக்கும் பால் ரைட்டரின் மொழிபெயர்ப்பு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியாகும் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு என்கிற வகையில், 21ஆம் நூற்றாண்டுக்கான மொழிபெயர்ப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

புதிய மொழிபெயர்ப்பு ஏன்?

மார்க்ஸ் மேற்பார்வையிட்டு இறுதிசெய்த ‘மூலதனம்’ முதல் பாகத்தின் இரண்டாவது ஜெர்மன் பதிப்பு (1872), புதிய ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ஆதாரமாக அமைகிறது. ஃபோக்ஸ் மொழிபெயர்ப்பு குறித்த விவாதங்கள் ஆரம்பக் காலகட்டத்தில் பெரிதாக நிகழ்வில்லை; இது அவருடைய மொழிபெயர்ப்பின் நிலையைவிட, அறிவுசார் உலகில் ‘மூலதனம்’ நூலின் நிலையை உணர்த்துகிறது எனக் கூறும் ரைட்டர், ‘சந்தை என்கிற கருத்தின்பால் தற்போது வளர்ந்துவரும் அதிருப்தியும் சந்தேகங்களும் பெரிதும் ஆர்வமூட்டின. இதுவரை வெளிவந்த நூல்களிலேயே, சந்தை அடிப்படைவாதத்தை வெகு விரிவாகத் தீர்க்கமாக விமர்சனக் கூராய்வு செய்த நூல் இதுதான் என நம்புகிறேன். இந்நூலின் புதிய மொழிபெயர்ப்பை வெளியிட இதுவே சிறந்த நேரம் என நினைத்தேன்!’ என்கிறார்.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

‘மூலதனம்’ நூல் உருவான வரலாற்றை எழுதிய ஃப்ரான்சிஸ் வீனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குள் புதைந்து போவதற்குப் பதிலாக, மார்க்ஸ் இப்போதுதான் தனது உண்மையான முக்கியத்துவத்தில் வெளிப்படுகிறார். இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனையாளராக அவர் இன்னும் மாற முடியும்.”

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *