
இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.
மாணவிகளின் ஆடைகளில் இருந்த பொத்தான்களை அகற்றியதாகவும், மூக்குத்தி, தாலி போன்றவற்றை கழற்றச் சொன்னதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், கர்நாடகாவில் புதிய போராட்டம் ஒன்று வெடித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த கலபுர்கியில் உள்ள ஒரு பள்ளி, நீட் தேர்வு மையமாக செயல்பட்டது. அந்தப் பள்ளிக்கு தேர்வு எழுத வந்த ஸ்ரீபாத் பாட்டீல் என்ற மாணவர் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அந்த மாணவனின் தந்தை கூறுகையில், “ஸ்ரீபாத் பாட்டீல் தேர்வு எழுத அரை மணி நேரம் தாமதமாகச் சென்றார். அவரது பூணூலை கழற்றச் சொல்லி, தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.
நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால், அவர் தனது பூணூலை என் கையில் கொடுத்துவிட்டு, தேர்வு எழுதச் சென்றார்,” என்று தெரிவித்தார்.
மாணவனின் பூணூலை கழற்றச் சொன்ன தகவல் பரவியதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கர்நாடகாவின் எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தச் சம்பவம் குறித்து போராட்டம் நடத்தியது.