
சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரியான இவர், வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 3-ம் தேதி சந்திரசேகரின் வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்த அருள்ராஜ், ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகளை பார்த்துவிட்டு விலையை பேரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், வைரங்களை வடபழனியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு கொண்டு வரும்படியும் அங்கு பணம் தருவதாகவும் போனில் கூறியுள்ளார் அருள்ராஜ். அதன்படி சந்திரசேகரும் நேற்று (4-ம் தேதி) மாலை, வைரங்களை எடுத்துக் கொண்டு வடபழனியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.
ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளை
அருள்ராஜ் தங்கியிருந்த அறைக்கு சந்திரசேகர் சென்றார். அவருக்கு குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அதே அறைக்குள் மறைந்திருந்த நான்கு பேர், சந்திரசேகரை தாக்கியுள்ளனர். பின்னர், அவரை கட்டிப் போட்டுவிட்டு ரூ.20 கோடி மதிப்பிலான வைரங்களுடன் காரில் தப்பிச் சென்றனர். இச்சம்பம் தொடர்பாக வடபழனி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தப்பிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தப்பியோடிய கும்பல் தூத்துக்குடிக்கு வருவதாக ரகசிய தகவலறிந்த தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸார், அந்த கும்பல் காரில் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு முதல் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே காரில் வந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் காரை சோதனை செய்ததில் ஒரு கைப்பையில் வைரங்கள் இருந்ததைப் பார்த்து விசாரணையை துரிதப் படுத்தியதில் சென்னையில் வைர வியாபாரியை கட்டிப் போட்டு தப்பியோடிய சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட் ,விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

பின்னர், அவர்களிடமிருந்த வைரங்களும், காரும் கைப்பற்றப்பட்டது. சிப்காட் காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளை கும்பல் சிக்கிய தகவலறிந்த சென்னை துணை ஆணையர் தலைமையின் கீழ் செயல்படும் தனிப்படையைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார், சிப்காட் காவல் நிலையம் வந்து அங்கிருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வைரம் மற்றும் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த தார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.