
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘எக்சஸைஸ் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் ஏவுகணை சோதனை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தில் அப்தலி என்ற ஏவுகணை ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து, தரைப்பகுதியை நோக்கி ஏவப்படும் இந்த ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.
‘‘பாகிஸ்தான் படைகளின் தயார் நிலை குறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், முப்படை தளைபதி ஆகியோர் தங்களின் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பாக். ராணுவம் கூறியுள்ளது. இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள், ‘‘பாகிஸ்தானின் இந்த திட்டமிட்ட ஏவுகணை சோதனை பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல். இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.