
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ‘ப்ளூ ஸ்டார்’ ஆப்ரேஷன் இந்தியா நன்கு தெரிந்ததே. இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் சமீபத்தில் ஒரு சீக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, பிரவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் நிறுவனத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அந்தக் கலந்துரையாடலில் ஒரு சீக்கியர் ராகுல் காந்தியிடம், “உங்களுடைய சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது, நீங்கள் சீக்கியர்களிடம், இந்தியாவில் பாஜக அரசாங்கத்தின் கீழ் தலைப்பாகை அணிய முடியுமா, கடா அணிய முடியுமா, குருத்துவார் செல்ல முடியுமா என்று கேட்டிருந்தீர்கள்.
பாஜக குறித்த பயம்
இப்படி நீங்கள் பாஜக குறித்து சீக்கியர்களிடம் பயத்தை உருவாக்கினீர்கள். ஆனால், நீங்கள் தான் அரசியல் பயமில்லாமல் இருக்க வேண்டும் என்று கூறினீர்கள். எங்களுக்கு வெறும் கடா, தலைப்பாகை அணிவது மட்டும் போதாது. எங்களுக்கு கருத்து சுதந்திரமும் வேண்டும். இது கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் எங்களுக்கு கிடைக்கவில்லை.
ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் தலித் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறது. அது பிரிவினைவாதம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அதை ‘பிரிவினைவாத ஆவணம்’ என்று முத்திரை குத்தியது.
பஞ்சாப்பில்…
இதை உங்கள் கட்சி செய்தது. உங்களது தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் உங்கள் கட்சிக்கு இல்லை.
பாஜகவின் இந்தியா எப்படி இருக்கும் என்று பயமுறுத்துகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சி இதுவரை சீக்கியர்களுடன் எந்த சமரசத்திற்கும் முயற்சிக்கவில்லை. அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? இப்படி தொடர்ந்தால், பாஜக பஞ்சாப்பிலும் நுழைந்துவிடும்,” என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியின் பதில்
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “சீக்கியர்களை பயமுறுத்துவதாக நான் நினைக்கவில்லை. தங்கள் மதத்தை வெளிப்படுத்த முடியாத இந்தியாவை விரும்புகிறீர்களா என்பது தான் என் பேச்சின் கருத்தாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் தவறுகளைப் பொறுத்தவரை, நான் பொறுப்பில் இல்லாத காலத்தில் பல தவறுகள் நடந்துள்ளன. ஆனால், கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பேற்பதில் எனக்கு மகிழ்ச்சி. 1980-களில் நடந்தவை தவறு என்று நான் பொதுவெளியில் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
நான் பொற்கோவிலுக்கு பல முறை சென்றுள்ளேன். இந்தியாவில் உள்ள சீக்கியர்களுடன் நான் நல்ல உறவில் இருக்கிறேன்,” என்று பேசினார்.