‘கொல்கத்தா வெற்றி!’

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்திருந்தது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் நின்று மிரட்டலாக ஆடி 95 ரன்களை அடித்து போராடியிருந்தார். ஆனாலும் ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியை 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றிருக்கிறது.

KKR

‘கொல்கத்தா பேட்டிங்!’

கொல்கத்தா அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. சுனில் நரைன் வெறும் 11 ரன்களில் யுத்விர் சிங்கின் ஓவரில் அவுட் ஆகியிருந்தார். முதல் விக்கெட் சீக்கிரமே விழுந்திருந்தாலும், அடுத்தடுத்து கொல்கத்தாவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப்களும் அமைந்தது. ரன்னும் சீராக வந்துகொண்டே இருந்தது. ரஹானேவும் குர்பாஸூம் இணைந்து 56 ரன்களை எடுத்திருந்தனர்.

ரஹானேவின் விக்கெட்டை ரியான் பராக்கே எடுத்துக் கொடுத்தார். மிடில் ஓவர்களில் கொல்கத்தா கொஞ்சம் சறுக்கியதைப் போல இருந்தது.

Russell
Russell

ஆனால், கடைசிக்கட்ட ஓவர்களில் அங்ரிஷ் ரகுவன்ஷியும் ரஸலும் இணைந்து அசத்திவிட்டனர். குறிப்பாக, ரஸல் 25 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருந்தார். மஹீஷ் தீக்சனாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். ஆகாஷ் மத்வால் வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங்கும் பெரிய ஷாட்களை ஆட கொல்கத்தா அணி 206 ரன்களை எடுத்தது.

Jaiswal
Jaiswal

‘ராஜஸ்தான் சேஸிங்!’

ராஜஸ்தானுக்கு 207 ரன்கள் டார்கெட். நல்ல தொடக்கமும் நல்ல பார்ட்னர்ஷிப்களும் அமைந்தால் மட்டுமே ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியும் எனும் நிலை. ஆனால், இது எதுவுமே ராஜஸ்தானுக்கு அமையவில்லை. வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் வைபவ் அரோராவின் பந்தில் அவுட் ஆகினார். நம்பர் 3 இல் வந்த குணால் சிங் ரத்தோர் மொயீன் அலியின் பந்தில் டக் அவுட்.

பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 34 ரன்களில் மொயீன் அலியின் பந்தில் அவுட் ஆகி ஏமாற்றினார். வருண் சக்கரவர்த்தி தன் பங்குக்கு மாயாஜால கூக்ளிக்களை வீசி ஹசரங்காவையும் துருவ் ஜூரேலையும் ரன் கணக்கை தொடங்க விடாமலேயே போல்ட் ஆக்கினார். ராஜஸ்தான் அணி 71-5 என்ற நிலையில் இருந்தது. 200+ சேஸில் இப்படியொரு நிலை நிச்சயமாக கவலைக்குரியதுதான்.

Riyan Parag
Riyan Parag

‘பக்குவமான ரியான் பராக்!’

ஆனால், ரியான் பராக்கும் ஹெட்மயரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். குறிப்பாக, ரியான் பராக் பக்குவமான இன்னிங்ஸை ஆடினார். ஆரம்பத்தில் பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடினார். அதன்பிறகு விக்கெட்டுகள் விழுகையில் கொஞ்சம் நிதானமாக நின்றார். ஒரு கட்டத்தில் போட்டி கையை விட்டு செல்கிறது என்பதை உணர தொடங்கியவுடன் அட்டாக் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

மொயீன் அலியின் ஒரே ஓவரில் மட்டும் 5 சிக்சர்களோடு 32 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. ஹெட்மயரும் நிலைமையை உணர்ந்து ரியான் பராக்குக்கு செகண்ட் பிடில் ஆடியிருந்தார். இந்தக் கூட்டணி 92 ரன்களை சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

Riyan Parag
Riyan Parag

இங்கேதான் ஹர்ஷித் ராணா ட்விஸ்ட் கொடுத்தார். நின்று ஆடிய ஹெட்மயர், ரியான் பராக் இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார். அவர் வீசிய ஒரு ஸ்லோயர் ஒன்னில் சிக்சர் அடிக்க முயன்று லாங் ஆனில் ரியான் பராக் கேட்ச் ஆனார். 95 ரன்களை எடுத்திருந்தார். நல்ல இன்னிங்ஸ். சதம் அடித்து போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும், தவறவிட்டுவிட்டார்.

ஆனாலும் ராஜஸ்தான் விடவில்லை. ஷூபம் துபே இம்பாக்ட் வீரராக வந்தார். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை. வைபவ் அரோராவின் இந்த ஓவரில் 19 ரன்களை சேர்த்துவிட்டார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. வைபவ் அரோரா ஒரு யார்க்கரை இறக்க அந்த பந்தில் 2 ரன்களை நிறைவு செய்ய முடியாமல் ஆர்ச்சர் ரன் அவுட் ஆக ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

KKR
KKR

ராஜஸ்தான் அணி நடப்பு சீசனில் நான்கைந்து போட்டிகளை இப்படி நெருங்கி வந்து நூலிழையில் இழந்திருக்கிறது. சரியாக முடித்து அவற்றை வென்றிருந்தால் ராஜஸ்தான் அணியும் இப்போது ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருந்திருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *