ன்றைய காலகட்டத்தில் இல்லற வாழ்வில், தங்கள் இணையுடன் நேரம் செலவிடும் நபர்களின் எண்ணிக்கையைவிட இணையத்தில் மூழ்கிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேலும் தற்போது இந்த இணைய உலகம் ‘படிக்கும்’ அறையைத் தாண்டி ‘படுக்கை’ அறைவரை வந்துவிட்டது. இன்று பல குடும்பங்கள் பிரிய முக்கியக் காரணமும் இந்த டிஜிட்டல் உலகம்தான்.

டிஜிட்டல் உலகம் கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையை எந்தெந்த விதங்களில் எல்லாம் பாதிக்கிறது? அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி? மனநல மருத்துவர் டி.வி. அசோகனிடம் பேசினோம்.

தாம்பத்ய வாழ்க்கை Vs இணையம்

இணையத்தைச் சார்ந்த ஃபேஸ்புக், யூ-டியூப் போன்றவை தங்களது வியாபார நோக்கத்தை முன் நிறுத்தி ஏதேதோ செய்துகொண்டிருக்கின்றன.

இவர்கள் விரிக்கும் வலையில்தான் நாம் சிக்கிக்கொள்கிறோம். இது ஒருவரின் பொது வாழ்க்கை முதல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைவரை பாதிக்கிறது.

மேலும் இன்றைய கணவன்-மனைவி வாழ்க்கைக்குள் இணையத்தின் குறுக்கீடு அதிகமாகவே உள்ளது. கணவன்-மனைவி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து நேருக்கு நேர் பேசிக்கொள்வதைவிட மொபைலிலோ அல்லது இணையதளத்தின் வழியாகவோ பேசிக்கொள்வதுதான் அதிகம்.

இது அவர்களின் அன்யோன்யத்தை பாதிக்கும். தம்பதி ஒருவரை மற்றொருவர் நேரடியாகப் பார்த்துப் பேசிக்கொள்ளும்போது உருவாகும் உணர்ச்சிகள் எதுவும் போனில் பேசிக்கொள்வதாலோ அல்லது வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜை ஃபார்வேர்ட் செய்வதாலோ ஏற்படப்போவதில்லை.

குறிப்பாக, இந்த டிஜிட்டல் உலகம் தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படுத்தும் விரிசல்கள் ஏராளம். டிஜிட்டல் உலகம் வழியாக இல்லற வாழ்க்கையை பாதிக்கும் முதல் காரணி, ஆபாசப் படங்கள்.

கணவனோ மனைவியோ இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு தங்கள் நிஜ வாழ்க்கையிலும் அதுபோன்ற ஒரு தாம்பத்ய உறவை எதிர்பார்த்து அது கிடைக்காதபோது விரக்தியடைகின்றனர்.

தாம்பத்ய வாழ்க்கை Vs இணையம்
தாம்பத்ய
வாழ்க்கை

என்னிடம் சிகிச்சை பெற வந்த ஒருவர், ‘எனக்கு தாம்பத்யத்தில் ஆர்வமே இல்லை சார்’ என்றார். ஏன் என்று கேட்டதற்கு, ‘என் மனைவியுடன் நான் உறவு கொள்ளும்போது, நான் பார்த்த ஆபாசப் படங்களில் பெண்கள் ஒலி எழுப்புவதைப்போல என் மனைவி செய்வதில்லை. இதனால் எனக்கு உறவு முழுமையடையாத ஓர் உணர்வு ஏற்படுகிறது’ என்றார். ஓர் ஆபாசப்படம் ஒருவரின் தாம்பத்ய வாழ்க்கையை எதுவரை பாதித்திருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

மேலும் ஒருவர் இதுபோன்ற ஆபாசப்படங்களைப் பார்த்துவிட்டு வெறும் காமத்தோடு மட்டும் தன் இணையை நெருங்கும்போது அந்த தாம்பத்ய உறவு வலுவாக இருக்காது. சிலர் இந்த ஆபாசப்படங்களில் காட்டப்படும் காட்சிகளைப்போல நிஜ தாம்பத்யத்திலும் எதிர்பார்க்கும்போது அது அவரின் துணைக்குப் பிடிக்காமல் இருந்தாலோ, அருவருப்பை ஏற்படுத்தினாலோ அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் விரிசல் ஏற்படலாம்.

இதுபோல பல்வேறு விதங்களில் கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்ய வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது டிஜிட்டல் உலகம்.

மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.
மனநல மருத்துவர் டி.வி.அசோகன்

* வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டா போன்றவற்றில் தங்கள் இணையரின் மீதான அன்பை வெளிப்படுத்துவதைவிட, நேரில் பார்த்து சண்டைபோட்டுக்கொள்வதுகூட இணையருக்குள் ஒரு நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும்.

* இணையத்தில் இருக்கும் ஆபாசப் படங்கள் எல்லாம் சித்திரிக்கப்பட்டவையே. இதில் நடிப்பவர்கள் இதற்கென பிரத்யேகமாக தங்கள் உடல்களைத் தயார்செய்து வைத்திருப்பவர்கள். எனவே இந்த ஆபாசப் படங்களையும் நிஜ தாம்பத்ய வாழ்க்கையையும் ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

* இணையருடன் இருக்கும் பர்சனல் நேரங்களில் மொபைல் ஆஃப்லைனில் இருப்பதே சிறந்தது.

* தினமும் அலுவலக வேலை, வீட்டு வேலைகளுக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேச சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

* விடுமுறை தினங்களில் உங்கள் துணையுடன் கடற்கரை, மலைப்பிரதேசம் போன்ற இயற்கை சார்ந்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். காதலுடன் கூடிய காமமே ஆரோக்கியமானது என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *