மோசடிகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. மும்பையில் `பழைய 5 ரூபாயை கொடுத்தால் ஒரு கோடி கொடுப்போம்’ என்று கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்றைக்கு சமூக வலைத்தளங்கள்தான்மூலமாக பெரும்பாலான மோசடிகள் நடக்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. அந்த விளம்பரத்தை எம்.எஸ்.காய்ன் கம்பெனி கொடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

மும்பையில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் 48 வயது நபர் அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் இருந்த நம்பருக்கு போன் செய்து பேசினார்.

தன்னிடம் 13 பழைய 5 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தெரிவித்தார். போனில் பேசிய சஞ்சீவ் குமார் என்பவர் துப்புரவு தொழிலாளியிடம் ரூபாய் நோட்டுகளை போட்டோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

துப்புரவு தொழிலாளியும் போட்டோ எடுத்து அனுப்பினார். அதனை பார்த்துவிட்டு 98 லட்சம் கொடுப்பதாக சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.

மேலும் பதிவுக்கட்டணமாக ரூ.1200 செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் சஞ்சீவ் குமார் போன் செய்து தனது ஊழியர் 98 லட்சத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்படுவதாக குறிப்பிட்டார்.

அடுத்த சிறிது நேரத்தில் சஞ்சீவ் குமார் துப்புரவு தொழிலாளிக்கு போன் செய்து தனது ஊழியர் மும்பை விமான நிலையத்தில் சைபர் பிரிவு அதிகாரி சுனில் தத்தா என்பவரிடம் சிக்கிக்கொண்டதாகவும், பணம் இருந்த பைக் உங்களது பெயரில் இருப்பதால் நீங்கள் போலீஸாருக்கு ரூ.60 ஆயிரம் செலுத்தவேண்டும் என்று குமார் தெரிவித்தார்.

ஆன்லைன் மோசடி

ஆனால் துப்புரவு தொழிலாளி தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். சுனில் தத்தா மறுநாள் போன் செய்து 60 ஆயிரத்தை இரண்டு மடங்காக கொடுக்கவில்லையெனில் கைது செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டினான்.

இது தவிர ஜி.எஸ்.டி, வரி என பல்வேறு வரிகள் என்று கூறி பணத்தை வசூலித்தனர். துப்புரவு தொழிலாளி மொத்தம் 18.3 லட்சம் கொடுத்தார். இதில் 15 லட்சத்தை அவர் தெரிந்தவர்களிடம் வெளியில் கடன் வாங்கிக்கொடுத்தார். அப்படி இருந்தும் பணம் கேட்பதை நிறுத்தவில்லை. 98 லட்சம் உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து எடுக்க கூடுதலாக ரூ.2.1 லட்சம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

துப்புரவு தொழிலாளி அப்பணத்தை தனது உறவினர் ஒருவரிடம் கேட்டார். அதோடு உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்தும் தெரிவித்தார். உடனே துப்புரவு தொழிலாளி தெரிவித்த கம்பெனியின் நம்பரை ஆன்லைனில் தேடி அந்த கம்பெனியிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

ஆன்லைன் மோசடி | scam

அக்கம்பெனியினர் தாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்று தெரிவித்தனர். அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரிந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மாநிலத்தில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த வங்கிக்கணக்கை முடக்க போலீஸார் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு உங்களது பெயரில் வந்துள்ள பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது என்று கூறி மிரட்டி பணம் பறித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *