மும்பையில் நடந்த வாடகை கார் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்த பாவேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து மிகப்பெரிய மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சந்தீப் என்பவர் தான் வாடகை கார் வியாபாரம் செய்வதாகவும், மும்பை விமான நிலையம், மும்பை துறைமுகத்தில் வாகனங்களை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதாக பாவேஷிடம் தெரிவித்தார்.

மேலும் பாவேஷிடம் கார் வாங்கி தன்னிடம் கொடுத்தால் மாதம் ரூ.55 முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் என்று தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி பாவேஷ் கார் ஒன்றை விலைக்கு வாங்கி அதனை சந்தீப்பிடம் கொடுத்தார்.

கைதான சந்தீப்

இதற்காக 100 ரூபாய் முத்திரைத்தாளில் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். கார் வாங்கிச்சென்ற பிறகு சில மாதங்கள் சொன்னபடி பணத்தை சந்தீப் ஆன்லைன் மூலம் போட்டுவிட்டார். அதன் பிறகு பணம் கொடுப்பதை சந்தீப் நிறுத்திவிட்டார்.

அதோடு பாவேஷ் போன் அழைப்புகளை சந்தீப் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பொறுத்துப்பார்த்துவிட்டு இது குறித்து பாவேஷ் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் சந்தீப் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி அருகில் உள்ள தாபோலி என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது.

அங்கு சென்ற போலீஸார் சந்தீப் மற்றும் அவனது கூட்டாளி சச்சின் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மோசடி

இது குறித்து வசாய்-விரார் போலீஸ் கமிஷனர் மதுக்கர் பாண்டே கூறுகையில், ”கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி மும்பை, நவிமும்பை, புனே, நாசிக், குஜராத்தில் போலி வாடகை கார் திட்டத்தை செயல்படுத்தி 1375 பேரிடம் 20 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ரூ.25 கோடி மதிப்புள்ள கார் உள்பட 246 வாகனங்கள் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தலைமறைவாக இருக்கும் எஞ்சியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஏற்கெனவே மும்பையில் மக்கள் ஆன்லைன் மோசடியால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாடகை கார் மோசடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *