ஜம்முவை சேர்ந்த முனீர் அகமத் என்பவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2017-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மினால் கான் என்ற பென்னை 2022-ல் திருமணம் செய்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சமீபத்தில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து முனீர் அகமத் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்துவிட்டதாக கூறி அவரை பணியில் இருந்து மத்திய அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது.

இது குறித்து முனீர் கான் கூறுகையில், ”2022-ம் ஆண்டு டிசம்பர் மாதமே நான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்யப்போவதாக எனது மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன். உடனே சம்பந்தப்பட்ட பெண்ணின் பாஸ்போர்ட், திருமண அழைப்பிதழ், அபிடவிட் போன்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். நானும் எனது பெற்றோர், வி.ஏ.ஓ, மாவட்ட மேம்பாட்டுக்கமிட்டி உறுப்பினர் ஆகியோரின் கடிதத்துடன் திருமணத்திற்காக விண்ணப்பித்து அனுமதியும் பெற்றேன்.

கடந்த ஆண்டு மே 24-ம் தேதி ஆன்லைன் மூலம் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். திருமண புகைப்படங்களை நான் எனது உயர் அதிகாரியிடமும் கொடுத்தேன். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மினால் கான் 15 நாள் விசாவில் இந்தியாவிற்கு வந்தார்.

அவருக்கு நிரந்தர விசா கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் 15 நாள் விசா முடிந்தவுடன் அவரை நாடு கடத்த அரசு முயன்றது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்து நாடு கடத்த தடை பெறப்பட்டது.

நான் விடுமுறை முடிந்து பணியில் சேர சென்ற போது என்னை போபாலுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். நானும் உடனே அங்கு சென்று பணியில் சேர்ந்தேன். ஆனால் என்னை திடீரென பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை நான் மறைத்ததாக கூறி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர். இதை எதிர்த்து நான் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து நீதிபெறுவேன்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *