
ஜெர்ரி, வட்டாரம், எந்திரன், நஞ்சுபுரம், வேலாயுதம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ராகவ் ரங்கநாதன். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘நாக் நாக்’. மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நவீன் சுந்தர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி ராகவ் ரங்கநாதன் கூறும்போது, “இத்தனை காலமாக என்னை நடிகர், நடனக் கலைஞர், இசை கலைஞராகப் பார்த்திருக்கலாம். இப்போது முதல்முறையாக இயக்குநர் ஆகி இருக்கிறேன். இதன் மூலம் என் கனவு நனவாகி இருக்கிறது. இது ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. கதைதான் ஹீரோ. நான் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பி அதன்படி உருவாக்கி இருக்கிறேன்” என்றார்.