Doctor Vikatan: என் தோழிக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவளுக்கு இதற்கு முன் காதல் அனுபவமும், அந்தக் காதலருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட அனுபவமும் இருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்து, வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் கடந்தகால தாம்பத்திய அனுபவம் கணவருக்குத் தெரியாமலிருக்க, வெஜைனாவில் செய்யப்படுகிற அறுவைசிகிச்சை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறாள். அந்தச் சிகிச்சை அவசியமா…?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
ஹைமன் என்பது பெண்ணின் பிறப்புறுப்பின், அதாவது வெஜைனாவின் நுழைவாயிலில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற தோல் திசு. இது முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வெஜைனாவின் திறப்பை மூடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த சவ்வு வித்தியாசமான வடிவம் மற்றும் தடிமனில் இருக்கும்.
ஹைமன் கிழிந்தாலோ அல்லது விரிவடைந்தாலோ வலி அல்லது லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் இதை உணர்வதில்லை. உடற்பயிற்சி செய்வது, டாம்பூன், மென்ஸ்டுரல் கப் போன்றவற்றைப் பயன்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் அல்லது தாம்பத்திய உறவு போன்ற பல்வேறு காரணங்களால் ஹைமன் கிழியலாம் அல்லது விரியலாம்.
ஹைமன் பகுதிக்கென பிரத்யேக பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஹைமன் டெஸ்ட் என்பது எல்லாப் பெண்களுக்கும் செய்யப்பட மாட்டாது. அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருந்தாலோ, வேறு ஏதேனும் பிரச்னை என்றாலோ மட்டும்தான் ஹைமன் டெஸ்ட் செய்யப்படும். சமீபகாலங்களில் ‘ஹைமனோபிளாஸ்டி’ (Hymenoplasty ) அல்லது ‘ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி’ (Reconstructive surgery ) போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். எல்லாப் பெண்களுக்கும் இந்தச் சிகிச்சை அவசியப்படுவதில்லை.

திருமணத்துக்கு முன்பு தாம்பத்திய உறவில் ஈடுபட்ட அனுபவம் பலருக்கும் இருக்கலாம். எதிர்பாராத சூழ்நிலையில் வேறொருவருடன் திருமணம் நிகழும்போது, முந்தைய அனுபவம் தெரியாமலிருக்க, இதுபோன்ற ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி தேவையா என்ற கேள்வியோடு சிலர் மருத்துவர்களை அணுகுவதுண்டு. தேவையில்லை என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் பதிலாக இருக்கும். செக்ஸ் அனுபவத்துக்கும், ஹைமன் பகுதி கிழிந்தோ, தளர்ந்தோ போவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல தாம்பத்திய உறவு தவிர்த்து அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்பதால் பெண்கள் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. இந்தக் காலத்தில் பல பெண்களும் மென்ஸ்டுரல் கப் பயன்படுத்துகிறார்கள். அதை வேகமாகச் செலுத்திப் பழகியவர்களுக்கும் ஹைமன் பகுதி பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் தோழிக்கு இந்த அறுவை சிகிச்சை அவசியமில்லை என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.