
சென்னை தோல்வி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. போட்டியில் சென்னை அணியின் பேட்டர் டெவால்ட் ப்ரெவிஸ் கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த சம்பவம் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக மாறிவிட்டது.
‘டெவால்ட் ப்ரெவிஸ் அவுட் ஆன முறை!’
லுங்கி இங்கிடி வீசிய 16 வது ஓவரின் மூன்றாவது பந்தில் டெவால்ட் ப்ரெவிஸ் lbw ஆகியிருந்தார். அது ஒரு Full Toss பந்து. அந்த பந்தை ப்ரெவிஸ் அடிக்க முயன்று முடியாமல் பேடில் வாங்கினார். உடனே லுங்கி இங்கிடியும் பெங்களூரு வீரர்களும் நடுவரிடம் அப்பீல் செய்ய தொடங்கினர். நடுவரும் ஒன்றிரண்டு விநாடிகளில் அவுட் கொடுத்துவிட்டார்.
ஆனாலும் டெவால்ட் ப்ரெவிஸூம் மறுமுனையில் நின்ற ஜடேஜாவும் வம்படியாக 2 ரன்களை ஓடிவிட்டு அதன்பிறகு கூடி பேசி ப்ரெவிஸ் ரிவியூவ் கேட்பார். அவுட் கொடுக்கப்பட்டு 15 விநாடிகளுக்குள் ரிவியூவ் கேட்க வேண்டும். இவர்கள் ஓடியெல்லாம் முடித்துவிட்டு பொறுமையாக கேட்டதில் நேரமே முடிந்துவிட்டது. அதனால் ரிவியூவெல்லாம் எடுக்க முடியாது எனக் கூறி அம்பயர் ப்ரெவிஸை வெளியே அனுப்பிவிட்டார்.

ரீப்ளேயில் அந்த பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்வது தெளிவாக தெரிந்தது. அது அவுட்டே இல்லை. ரிவியூவ் எடுத்திருந்தால் தப்பித்திருப்பார். அடிப்படையான விஷயத்திலேயே ப்ரெவிஸ் கவனமாக இல்லை. என்னவென்றால் அம்பயர் அவுட் கொடுக்கும் போதுதான் ப்ரெவிஸ் க்ரீஸை விட்டு இரண்டடியே வந்திருக்கிறார்.
அம்பயர் அவுட் கொடுத்துவிட்டால் அதற்கு பிறகே பந்து Dead ஆகிவிடும். அதன்பிறகு, ஆட்டமே கிடையாது. மேலும், ரிவியூவ் எடுப்பதற்கான டைமரும் அப்போதே ஓட தொடங்கிவிடும். அதை உணராமல் அதன்பிறகு இரண்டு ரன்களை ஓடி தாமதமாக்கிவிட்டு ரிவியூவ் கேட்டார்.

அம்பயர் அவுட் கொடுத்து 15 விநாடிக்குள் ரிவியூவ் எடுக்க வேண்டும். ப்ரெவிஸ் ரிவியூவ் எடுக்கும் போது 25 விநாடிகளை தாண்டிவிட்டது. இதில் கவனமாக இருந்திருந்தால் ப்ரெவிஸ் அவுட்டே ஆகியிருக்கமாட்டார். அவர் இருக்கும் பார்முக்கு போட்டியை சீக்கிரமே முடித்திருப்பார்.