
‘ரபாடா விலகல்!’
தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா ஐ.பி.எல் குஜராத் அணிக்காக ஆடி வருகிறார். ஆனால், இந்த சீசனின் தொடக்கத்திலேயே அவர் திடீரென தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக ரபாடா குஜராத் அணியின் முகாமிலிருந்து வெளியேறியிருப்பதாக அப்போது சொல்லப்பட்டது.
‘பின்னணி!’
ஆனால், இப்போது ரபாடாவே உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். அதாவது, தடைசெய்யப்பட்ட ஒரு மருந்தை எடுத்துக்கொண்டதால்தான் தன்னை கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்ததாக ஒத்துக்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
‘ரபாடா விளக்கம்!’
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ‘என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களை அவமதிப்பு செய்துவிட்டேன். கிரிக்கெட்டை நான் எப்போதுமே அலட்சியமாக நினைத்ததே இல்லை. கிரிக்கெட் ஆடும் பெருமிதத்தை விட என்னுடைய தனிப்பட்ட சுயநலன்கள் எனக்குப் பெரிதல்ல.

பரிசோதனையில் மனமகிழ் மருந்து ஒன்றை நான் எடுத்துக்கொண்டது தெரிய வந்தது. அதற்காக என்னை கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். நான் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப ஆர்வமாக இருக்கிறேன். என்னுடன் உறுதியாக நின்ற தென்னாப்பிரிக்க அணிக்கும் குஜராத் அணிக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி. நான் இந்தத் தருணத்திலேயே தேங்கிவிட மாட்டேன். வழக்கம்போல கடினமாக உழைத்து அதே கனவோடும் உறுதியோடும் கிரிக்கெட்டை ஆடுவேன்.’ எனக் கூறியிருக்கிறார்.