சுற்றுலா சென்ற 26 பேரை சுட்டு படுகொலை செய்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

குறிப்பிட்ட மதத்தினர் இந்தத் தாக்குதலில் டார்கெட் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமில் தற்போது எப்படிப்பட்ட சூழல் நிலவிவருகிறது? அங்குள்ள மக்களின் மனநிலை என்ன? குறிப்பிட்ட, மதம் குறிவைக்கப்பட்டிருக்கிறதே? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்…

மன்சூர் அலிகான்

“என்னுடைய காஷ்மீர் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று. காஷ்மீரில் நண்பர் வீட்டுத் திருமணம் இன்று நடக்கிறது. அதனால், கடந்த மாதமே காஷ்மீருக்கு டிக்கெட் புக் செய்துட்டோம். என் மனைவி மற்றும் பிள்ளைங்க காஷ்மீரைப் பார்க்கணும்னு விருப்பப்பட்டதால் குடும்பமா கடந்த 28-ஆம் தேதி காஷ்மீர் வந்தடைந்தோம். அதற்குள், 22-ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்துடுச்சு. இந்தக் கொடூர சம்பவத்தை யாருமே எதிர்பார்க்கல. உயிரிழந்தக் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை இந்தப் பேட்டியின் மூலமும் தெரிவிச்சுக்கிறேன்.

நான் காஷ்மீர் வர்றது இது ரெண்டாவது முறை. ஏற்கெனவே, ‘தாயகம்’ பட ஷூட்டிங்கிறாக வந்திருக்கேன். அப்போல்லாம் காஷ்மீர் மக்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சியா இருந்தாங்க. இப்போ மகிழ்ச்சி புலப்படல. கண்ணீர் முகங்களா தென்படுறாங்க. குறிப்பா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டுக்கிட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அகதிகளா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. இதைப் பார்க்கும்போது ரொம்பவே வருத்தமா இருக்கு. அதுவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அவங்க நிலைமை இன்னும் மோசமாகிடுச்சு. இந்தியாவின் பெரும்பான்மையான மாநில மக்கள் சந்தோஷமா இருக்கும்போது, காஷ்மீரிகளுக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிலைமை?

மன்சூர் அலிகான்

நான் பரி மஹால், குல்மார்க், பஹல்காம் உள்ளிட்ட பல பகுதிகளை குடும்பத்துடன் நேரில் போய் பார்வையிட்டேன். காஷ்மீர் மக்களுக்கு சுற்றுலா தான் வருமானத்தைக் கொடுக்குது. டூரிஸ்ட் வந்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும். மைனஸ் டிகிரி குளிர்ல குதிரைகள் மேல மக்களை உட்காரவெச்சு அழைச்சிக்கிட்டுப் போறது சாதரணமான விஷயம் கிடையாது. மாடுகளைவிட அடிமைத்தனமா குடும்ப வறுமையைப் போக்கிக்க கஷ்டப்படுறாங்க. அவங்களை இன்னும் வறுமையில் தள்ளிருக்கு பஹல்காம் சம்பவம். எல்லோரும் வேலை இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க. சுற்றுலா பயணிகளோட வருகை குறைஞ்சுடுச்சு.

அப்படியே, சில சுற்றுலா பயணிகள் வந்தாலும் பயந்துக்கிட்டு ஆட்டோவுல போயிடுறாங்க. குதிரைல வர்றதுக்கே பயப்படுறாங்க. இதையெல்லாம் பார்த்துட்டுதான் நானும் என் குடும்பத்தினரும் குதிரைல போனோம். பஹல்காம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு. இப்போதான் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கு. இந்தப் பாதுகாப்பை முன்கூட்டியே செய்திருந்தா, அத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கமாட்டாங்களே? காப்பாற்றப் போன காஷ்மீரிகளும் உயிரிழந்திருக்கமாட்டாங்களே? அதுவும், ஒரு பிரபலமான சுற்றுலா தலத்தில் எப்படி சிசிடிவி இல்லாம போகும்? எப்படி ஒரு வாட்ச்மேன் கூட இல்லாமப் போவார்?

மன்சூர் அலிகான்

இதனால்தான், பஹல்காம் தாக்குதல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புது. முக்கியமா, காஷ்மீர் மக்களே இது தீவிரவாதத் தாக்குதல் இல்லைன்னு சொல்றாங்க. தேர்தல் அரசியலுக்காக உள்நாட்டு மக்கள் மீதே நிகழ்த்தப்பட்ட சதின்னு தீர்க்கமா நம்புறாங்க. உள்துறை அமைச்சகத்தோட நடவடிக்கைகளும். அவங்க சந்தேகத்தை உறுதிப்படுத்துற மாதிரிதான் இருக்கு.

சமீபத்தில், தமிழ்நாட்ல செயின் பறிப்பு சம்பவங்கள்ல ஈடுபட்டவங்களை உடனடியாக கைது பண்ணினது காவல்துறை. தமிழ்நாட்டு காவல்துறையிடம் இந்த கேஸை ஒப்படைச்சாக்கூட காஷ்மீரில் யார் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டாங்கன்னு இந்நேரம் கண்டுப்பிடிச்சிருக்கும். ஆனா, உள்துறை அமைச்சகம் ஏன் இன்னும் யாரையும் கைது பண்ணல. கண்டுபிடிக்கவும் இல்ல.

ஏதோ பழைய படத்தை வெச்சுக்கிட்டு இவர்தான் தாக்குதல் நடத்தினார்னு பொய் சொல்லிட்டிருக்கு. எல்லாத்துக்கும் பாகிஸ்தான் மேல பழியைப் போட்டு மதவெறியை தூண்டிகிட்டிருக்கு. பாகிஸ்தான் மக்களும் பாவம். பாகிஸ்தான் வறுமையும் ஏழ்மையும் சூழந்த நாடு. அரசியலுக்காக, அவங்கமேலப் பழியைப்போட்டு ஓட்டு வேட்டை நடத்தப் பார்க்குது அரசு. மக்கள் ஒன்னும் முட்டாள் கிடையாது. எல்லோருக்கும் இது உள்நாட்டு சதிங்கிறது தெரிஞ்சிருக்கு.

மன்சூர் அலிகான்

அதுமட்டுமில்லாம, பாகிஸ்தான் பார்டலிருந்து பல நூறு கிலோமீட்டர் தாண்டி பஹல்காம் இருக்கு. அவ்ளோ தூரத்திலிருந்து கடுங்குளிர்ல காட்டுவழியில வந்து எப்படி சுடமுடியும்? எப்படி வந்திருப்பாங்கன்னு மக்களே கேள்வியெழுப்புறாங்க. அவங்களோட கேள்வி நியாயமா இருக்கு. நான் ஒரு நடிகன். எனக்கு மதம் கிடையாது. எல்லா மக்களும் எனக்கு வேணும். நான் மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவன். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை ஏத்துக்கவே முடியாது. ஆனா, காஷ்மீரிகளின் கேள்வி நியாயமா இருக்கே?” என்கிறார் ஆதங்கத்தோடு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *