
“அளவுக்கு மீறினால் எதுவுமே திகட்டிவிடும்” என்பதற்குச் சரியான உதாரணம் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்தான். ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ படத்தில் உச்சத்தைத் தொட்ட MCU-வுக்கு அதன்பிறகு தொடர் சறுக்கல்கள்தான். புதிய கிளைக்கதைகளுடன் சீரிஸ், படங்கள் எனப் பல வெளியாக, அனைத்தையும் பின்தொடர முடியாமல் ரசிகர்கள் ஆர்வம் இழக்கத் தொடங்கினர்.
கதைகள், ட்ரீட்மென்ட், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் ஒரே மாதிரியாகப் பழகிப்போக ஆரம்பித்ததால் தீவிர மார்வெல் ரசிகர்களும் சோர்வடைந்தனர். இதன் விளைவுகள் பாக்ஸ் ஆபிஸிலும் தெளிவாகத் தெரிந்தன. அதனால், Phase 4, Phase 5 இரண்டிலுமே ஒரு சில படைப்புகள் தவிர மார்வெலுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, அடுத்த முக்கிய வில்லனாகப் படங்கள் மற்றும் சீரிஸ் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்ட கேங் (Kang) பாத்திரத்தில் நடித்த ஜோனாதன் மேஜர்ஸும் ‘குடும்ப வன்முறை’ வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பானதால் MCU-விலிருந்து நீக்கப்பட்டார். எனவே, மார்வெல் அனைத்தையும் மாற்றியமைத்து வேறொரு திசையை நோக்கிச் சென்றது.
இதன் விளைவாகத்தான் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ அறிவிக்கப்பட்டது. அயர்ன் மேனாக மார்வெல் ரசிகர்களைக் கவர்ந்த ராபர்ட் டௌனி ஜூனியர் டாக்டர் டூமாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் ரசிகர்களின் ஆர்வத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் மார்வெல் இருக்கும் இந்த நேரத்தில்தான் Phase 5-ன் கடைசி படமாக தண்டர்போல்ட்ஸ்* வெளியாகியுள்ளது.
கடந்த MCU படங்களில் துணை கதாபாத்திரங்களாக இருந்த சிலர் எப்படி ஓர் அணியாக இணைகிறார்கள் என்பதே இப்படத்தின் மையக்கரு. `அவெஞ்சர்ஸ்’, `கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ படங்களின் முதல் பாகத்தைப் போன்ற செட்-அப்தான். ஆனால், இவர்களுக்கு சூப்பர் பவர் என்று பெரிதாக எதுவும் இல்லை. மோசமான கடந்த காலத்தைக் கொண்ட இந்த கதாபாத்திரங்கள் ஓர் அணியாகச் சேரும்போது எப்படிச் சிறப்பானவர்களாக மாறுகிறார்கள், MCU-ல் அவர்களின் வருங்காலம் என்னவாக இருக்கப்போகிறது என்பதை விளக்கும் படமே தண்டர்போல்ட்ஸ்*.

CIA இயக்குநர் வலன்டினா அலெக்ரா டி ஃபோன்டெய்ன் ‘செண்ட்ரி’ என்ற ரகசியத் திட்டத்தில் இதுவரை காணாத சக்திகளைக் கொண்ட ஒரு சூப்பர்ஹீரோவை உருவாக்க முயல்கிறார். மனிதர்கள் மீது அனுமதியற்ற சோதனைகளை நடத்துகிறார். இத்திட்டம் பற்றி தகவல்கள் கசிய, அவரைப் பதவி நீக்கம் செய்ய வழக்கு தொடரப்படுகிறது. அவரும் ‘செண்ட்ரி’ திட்டம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அழிக்க முடிவெடுக்கிறார். அதன் ஒரு பகுதியாக தனக்காக அடியாள் வேலை செய்தவர்களையும் அகற்றத் திட்டமிடுகிறார். அனைவரையும் ஒரே இடத்திற்கு அழைத்து, ஒருவரை மற்றொருவர் கொல்லும்படி மிஷன் கொடுக்கிறார். ஆனால், வலன்டினா எதிர்பார்க்காத வகையில் அவர்கள் சூழ்ச்சியைப் புரிந்து ஒன்றிணைந்து செயல்படத் தொடங்குகிறார்கள். இவர்களுடன் ‘செண்ட்ரி’ திட்டத்தில் உயிர்பிழைத்த பாப் என்பவரும் இருக்கிறார். அவர் உண்மையிலேயே மிகச் சக்திவாய்ந்த சூப்பர்ஹீரோவாக இருக்க, அவரைக் கட்டுப்படுத்துகிறார் வலன்டினா. அவரை ‘செண்ட்ரி’ என உலகிற்கு அறிமுகப்படுத்த முடிவெடுக்கிறார். அசாத்திய சக்திகள் கொண்ட அவரை, எந்தத் திறனும் இல்லாத இந்த தண்டர்போல்ட்ஸ்* குழு எப்படி எதிர்கொள்கிறது என்பதே மீதிக் கதை.
சாதாரணமான கதையாக இருந்தாலும், அணுகுமுறையில் வித்தியாசம் காட்டி படத்தைச் சுவாரஸ்யமாக்குகிறார் இயக்குநர் ஜேக் ஷ்ரீயர். அவெஞ்சர்ஸ் பாணியில் அதற்கு நேர் எதிரான ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். காட்சிகள் நடக்கும் இடங்கள் கூட அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் இடம்பெற்ற இடங்களாகவே உள்ளன. இருந்தும் வேறு மாதிரியான உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். வெறும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமல்லாமல், குற்றவுணர்ச்சி, மன அழுத்தம் போன்ற ஆழமான உணர்வுகளைத் தொடும் படமாகவும் இதைப் படைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மார்வெல் படங்களுக்கேயுரிய விறுவிறுப்பு, பிரமாண்டம், நகைச்சுவை போன்றவை குறையாமலும் இருப்பது படத்தின் முக்கிய பலம்.

சமீபத்திய படங்களில் மல்டிவெர்ஸ், விண்வெளி என மிகவும் சிக்கலான விஷயங்களைக் கையாண்ட மார்வெல், மீண்டும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உணர்வுகளுடனும், தொடர்புப்படுத்திக்கொள்ளக் கூடிய கதாபாத்திரங்களுடனும் திரும்பியிருப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. படத்தின் முக்கிய பலம் கதாபாத்திரங்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரிதான். அனைத்து கதாபாத்திரங்களும் க்ரே ஷேட் கொண்டவைதான். அதைச் சிறப்பாகத் திரையில் கொண்டுவந்துள்ளனர் நடிகர்கள். ஃப்ளோரன்ஸ் பியூ, முன்னணி கதாபாத்திரமான யெலேனாவாக மிளிர்கிறார். தனது சகோதரி நடாஷா ரோமனோஃபை (பிளாக் விடோ) இழந்த துயரம், தனிமையில் மரத்துப்போன மனம் எனக் கதாபாத்திரத்தின் உளவியலைச் சிறப்பாக வெளிப்படுத்தும் அவர், ஆக்ஷன் காட்சிகளிலும் அசரடிக்கிறார். அவரின் டார்க் காமெடி டைமிங்கும் சிறப்பு. அவரது வளர்ப்புத் தந்தை அலெக்சியாக (ரெட் கார்டியனாக) நடித்துள்ள டேவிட் ஹார்பர், கொஞ்சம் சீரியஸான படத்தைத் தனது நகைச்சுவையால் சற்று இலகுவாக்குகிறார். பாப்/செண்ட்ரியாக வரும் லூயிஸ் புல்மன் பல்வேறு உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இவர்களுடன் செபாஸ்டியன் ஸ்டான், வயட் ரஸ்ஸல், ஜெரால்டின் விஸ்வநாதன், ஹன்னா ஜான்-கேமன், ஜூலியா லூயிஸ்-ட்ரெய்ஃபஸ் என அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
வழக்கம்போல, ஸ்டண்ட் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மார்வெல் எந்தக் குறையும் விடவில்லை. முழு நியூயார்க் நகரமும் இருளால் சூழப்படும் இறுதிக் காட்சியின் திரையாக்கம் மிகச்சிறப்பு. செண்ட்ரியின் அக உலகில் நடக்கும் காட்சிகளும் திறம்படப் படமாக்கப்பட்டுள்ளன. முந்தைய படங்களைப் போலத் தேவையற்ற அதிகப்படியான VFX இல்லாமல், கதைக்குத் தேவையானவற்றை மட்டுமே கொடுத்திருப்பது சூப்பர்ஹீரோ படங்களால் அலுப்படைந்த ரசிகர்களுக்குப் பெரிய ஆறுதல்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மார்வெல் எதைச் சிறப்பாகச் செய்ததோ, அதை மீண்டும் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது இப்படம். உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள், ஸ்பை திரில்லர் படத்துக்கான விறுவிறுப்பு என முக்கிய விஷயங்களை டிக் அடித்திருக்கிறது படம். எனினும், முற்றிலும் புதிய சூப்பர்ஹீரோ அம்சங்களே இல்லாத படம் எனவும் கூறமுடியாது. சில காட்சிகள் சுவாரஸ்யமற்று போவதற்கும் அதுவே காரணம். ஆனால், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட், சிறப்பான போஸ்ட் கிரெடிட் சீன் என மீண்டும் மார்வெல் படங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் படமாக வெற்றியடைகிறது இந்த தண்டர்போல்ட்ஸ்*.
டைட்டிலில் உள்ள ஸ்டாரிலேயே (*) பெரிய ஸ்பாய்லர் இருக்கிறது. அது என்னவென தெரியப் படத்தைப் பாருங்கள்!