தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு கோவிலுர் கிராமம். 18 கிராமங்களுக்கு தலைகிராமமான இந்த ஊரில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். பங்குனி உத்திர தினத்தன்று 18 ஊர்களில் இருந்து பொதுமக்கள் காவடி எடுத்து வந்து கோயிலில் அமைந்துள்ள முருகன் சன்னனிதியில் செலுத்துவது வழக்கம்.

எலக்ட்ரிக் காவடி

அதே போல் மறுநாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்து வருவார்கள். பல காலமாக இந்த விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 12 மற்றும் 13-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

குறிப்பாக 13-ம் தேதி நடைபெற்ற எலட்ரிக் காவடிக்கு காவல்துறை சார்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வேடிக்கை பார்க்க திரண்ட கூட்டம் உள்ளிட்ட பல காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் விழா முடியவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில், ஊர் பொதுமக்கள் “மாணவர்கள் உள்பட 56 பேர் மீது தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், வாழ்வாதாரத்திற்காக சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், விவசாயிகளும் இதில் அடக்கம் எனவே இவர்கள் மீது பதிந்த வழக்கை மறு பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்” என காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.

கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழா

இது குறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், “பங்குனி உத்திர திருவிழா நல்ல முறையில் பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக காசவளநாடு கோவிலூரில் போலீஸ் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் குறிப்பாக எலக்ட்ரிக் காவடிக்கு பல நிபந்தனைகளை விதிக்கப்பட்டது.

எல்லாவற்றுக்கும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஒத்துக்கொண்டு விண்ணப்பம் ஒன்றில் பெயர், செல் நம்பரை எழுதிக்கொடுத்தனர்.

போலீஸ் சொன்னபடி நிகழ்ச்சியை முடிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்தனர். டிராக்டர் உள்ளிட்ட வாகங்களில் மின் விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிககளை கட்டி அலங்கரித்து ஒவ்வொரு ஊரில் இருந்தும் கோவிலூருக்கு வந்தனர்.

அப்போது பாடல்களை போட்டுக்கொண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எலக்ட்ரிக் காவடி முன்பு நடனமாடினர். இதை காண பல ஊர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்தனர்.

காசவளநாடு கோவிலூர் கிராமம்

பெரிய அளவில் கூட்டம் கூடியதால் பாதுக்காப்பாக நடத்த கூடிய கடமையுடன் போலீஸார் கண்ணும் கருத்துமாக செயல்பட்டனர். ஒரே சமயத்தில் பல ஊர்காவடிகள் வந்து விட்டதால் கோயிலை சுற்றி வருவதற்கு தாமதமானது. இதனால் குறிப்பிட்ட போலீஸ் சொன்ன நேரத்துக்குள் முடிக்க முடியவில்லை. நிகழ்ச்சி முடிவதற்கு அதிகாலை ஆகிவிட்டது. சிலர் மது போதையில் ஆங்காங்கே தகராறு செய்து கொண்டது தனிக்கதை.

இதையடுத்து தாலுகா காவல் நிலையத்தில், காசவளநாடு புதூர், கொல்லாங்கரை, நடுவூர், ஆழியவாய்க்கால், வேங்கராயன்குடிக்காடு, தெக்கூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகளான பொதுமக்கள் என 56 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடிய இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.

திருவிழாவில் போலீஸ் வழக்கு

எனவே இந்த வழக்கை மறுபரிசீலனை செய்து ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை சரக டி.ஐ.ஜி, எஸ்.பி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மேலும், ஆளும்கட்சி முக்கியஸ்தர்கள் தஞ்சாவூர் தி.மு.க எம்.பி முரசொலி, எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களும் பார்ப்பதாக சொல்லியுள்ளனர். மேலும் போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருப்பது ஆளும்கட்சியினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்வதற்கான முயற்சியிலும் இருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் போலீஸ் நிபந்தனைக்கு உட்பட்டு பங்குனி உத்திர திருவிழா நடத்துவோம். அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *