
கொல்கத்தா: “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன .எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடந்த நிகழ்வில் பேசிய அதன் இயக்குநர் ராகுல் நவீன், “2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னரே அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதற்கு முன்னர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் செயலற்றதாகவே இருந்தன” என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சாக்கெட் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.