
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வந்தவர், திடீரென அதிமுக பெண் நிர்வாகிக்கு முத்தம் கொடுப்பது உள்ளிட்ட ஆபாச சைகளை செய்திருக்கிறார்.
அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன்னுடைய கணவரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். இதையடுத்து ஆபாச சைகளை செய்தவரைப் பிடித்த அதிமுக பெண் நிர்வாகியின் கணவர், ஏன் இப்படி செய்கிறீர்கள் என சத்தம் போட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு ஓட்டேரி போலீஸார் வந்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை செய்த குற்றச்சாட்டில் சிக்கியவர் காவலர் தினேஷ் என்று தெரியவந்தது. மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக அதிமுக பெண் நிர்வாகி குற்றம் சாட்டினார்.
இதையடுத்து காவலர் தினேஷ் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தத் தகவல் உயரதிகாரிகளுக்கு தெரியவந்ததும் காவலர் தினேஷ் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் காவல் தினேஷ், தன்னை அதிமுக பெண் நிர்வாகியின் கணவர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அதிமுக பெண் நிர்வாகியின் கணவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.