
திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சிகாமணி (47). சிகாமணிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதனிடையே சிகாமணி கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தன் மனைவி பிரியாவிடம் கூறி இருந்தார்.
சிகாமணி கடைசியாக கடந்த மாதம் 24-ம் தேதி பிரியாவிடம் பேசியுள்ளார். அதன்பிறகு அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது.
தன் கணவரை தொடர்பு கொள்ள முடியாததால், பிரியா துபாயில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, “சிகாமணி கடந்த 21-ம் தேதியே இந்தியா கிளம்பிவிட்டார்.” என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பிரியா தன் கணவரை காணவில்லை என்று கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

ஆரம்பத்தில் ஆள் காணவில்லை என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறை விசாரணையில்,” கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா என்ற பெண் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கும், சிகாமணிக்கும் திருமணம் தாண்டி உறவு இருந்துள்ளது. அதில் ஏதாவது பிரச்னை ஆகியிருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் அவரின் மனைவி பிரியா கோவையில் புகாரளித்தார்.

காவல்துறையினர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சாரதாவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் அங்கு இல்லை என்பதால் சாரதாவின் வளர்ப்பு அப்பா தியாகராஜனை அழைத்துள்ளனர். தியாகராஜன் வழக்கறிஞர்களுடன் காவல் நிலையம் நேரில் சென்றுள்ளார்.
சாரதா துபாயில் உள்ள சிகாமணியின் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களுக்குள் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர். அப்போது சாரதா சிகாமணிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில் அதனை சாரதா திருப்பி கேட்ட போது சிகாமணி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாரதா கோபித்துக் கொண்டு கோவை திரும்பிவிட்டார். அவரை சமாதானப்படுத்த சிகாமணி கோவை வந்துள்ளார்.
இதனிடையே சாரதா இந்த விவகாரத்தை தன் அப்பா தியாகராஜனிடம் கூறியுள்ளார். அவர்கள் சிகாமணியை கொலை செய்வதற்காக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி பசுபதி பாண்டியனின் கூட்டாளி குட்டி தங்கம் என்றழைக்கப்படும் புதியவனை அணுகியுள்ளனர். புதியவன் கோவை வந்துள்ளார்.

சிகாமணிக்கு தடபுடல் விருந்து வைப்பதாக கூறி மது கொடுத்து, அசைவ உணவும் சாப்பிட வைத்துள்ளனர். அதில் ஏராளமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே சிகாமணி மயக்கமடைந்தார்.
பிறகு அவரை தியாகராஜன், சாரதா இணைந்து தாக்கி கொலை செய்தனர். சிகாமணியின் உடலை காரில் எடுத்துச் சென்று கரூர் மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசியுள்ளனர். தொடர்ந்து சாரதாவை துபாய் அனுப்பிவிட்டு புதியவன் நெல்லைக்கும், தியாகராஜன் கோவைக்கும் திரும்பியுள்ளனர்.

பொன்னமராவதி போலீஸ் சிகாமணியின் சடலத்தை அடையாளம் தெரியாத உடல் என்று வழக்குப்பதிவு செய்து அடக்கம் செய்துள்ளனர். காவல்துறை மோப்பம் பிடித்துவிட்டதால் சாரதாவின் வளர்ப்பு அப்பா தியாகராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்து கொலையை ஒப்புக் கொண்டார். ” என்றனர்.
தியாகராஜனின் பின்னணியை கேட்டு காவல்துறைக்கு தலை சுற்றிவிட்டது. தியாகராஜன் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (69). தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் கோமதி என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது.

கோமதி, அவரின் மகள்கள் நிலா மற்றும் சாரதா ஆகியோருடன் தியாகராஜன் வசித்து வந்துள்ளார். சாரதாவுக்கு குணவேல் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தியாகராஜன் குணவேலை கொலை செய்தார். இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தார். பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் வாங்கி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

தற்போது அதே மகளுக்காக மீண்டும் ஒரு கொலை செய்து சிறை சென்றுள்ளார். இதுதொடர்பாக புதியவன், சாராதாவின் அம்மா கோமதி, சகோதரி நிலா, ஸ்வாதி ஆகிய 4 பேரை காவல்துறை கைது செய்தனர். சாரதாவை கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஆள் மாயமான வழக்கை பீளமேடு காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். மேலும், அடக்கம் செய்யப்பட்ட சிகாமணியின் சடலத்தை மீட்டு கரூரில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிறகு அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்வதற்காக அவரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.