
‘குஜராத் வெற்றி!’
சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. குஜராத் அணியின் வெற்றிக்கு அவர்கள் டாப் 3 பேட்டர்கள்தான் காரணம் என கொண்டாடப்படுகிறது. அது உண்மையும்தான் கூட. நேற்றையப் போட்டியிலும் சாய் சுதர்சன், கில், பட்லர் என அவர்களின் டாப் 3 பேட்டர்களும் நன்றாகவே ஆடியிருந்தனர்.
‘டாப் 3 வெற்றி மந்திரம்!’
அவர்களின் ஆட்டத்தால்தான் குஜராத் அணி 200+ ஸ்கோரை எட்டியிருந்தது. இந்தப் போட்டியில்லை இந்த சீசன் முழுவதுமே அந்த மூவருமே நன்றாகத்தான் ஆடியிருக்கின்றனர்.

குஜராத் அணி இந்த சீசனில் அடித்திருக்கும் மொத்த ரன்களில் 76% ரன்களை இந்த மூவர்தான் எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். அதேமாதிரி, இதுவரை அந்த அணி ஆடியிருக்கும் 10 போட்டிகளில் எல்லா போட்டிகளிலும் குறைந்பட்சமாக டாப் 3 இல் ஒருவராவது அரைசதத்தை கடந்திருக்கின்றனர்.
பிரஷித் கிருஷ்ணா – மேட்ச் வின்னர்!
அந்த அணியின் வெற்றிக்கு இதெல்லாம் காரணம்தான். இவர்கள் எந்தளவுக்கு வெற்றியில் பங்களிக்கிறார்களோ அதே அளவுக்கு பிரஷித் கிருஷ்ணாவும் வெற்றிக்கு பங்களிப்பை செய்கிறார்.

குஜராத் அணி இதுவரை ஆடியிருக்கும் 10 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கும் பௌலர் பிரஷித் தான். பர்ப்பிள் தொப்பி அவரிடம்தான் இருக்கிறது. பிரஷித் கிருஷ்ணாவின் ஐ.பி.எல் கரியரிலுமே இதுதான் அவரின் சிறந்த சீசன்.
நேற்றைய போட்டியை குஜராத் வென்றதற்கும் பிரஷித் கிருஷ்ணாவின் ஸ்பெல்தான் பிரதான காரணமாக இருந்தது. பவர்ப்ளேயில் ஹெட் பவுண்டரிக்களாக அடிக்க ஆரம்பித்திருந்தார். அந்த சமயத்தில் கில் பிரஷித்துக்கு ஒரு ஓவரை கொடுத்தார். ஹெட்டின் விக்கெட்டை அவர் எடுத்துக் கொடுத்தார். இந்த விக்கெட் சன்ரைசர்ஸ் அணியை கொஞ்சம் மந்தப்படுத்தியது. ஆனால், அதன்பிறகும் க்ளாசெனும் அபிஷேக் சர்மாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிலைத்து நின்றனர்.
‘பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர்!’
அந்த பார்ட்னர்ஷிப் அபாயகரமாக மாறும் சூழலில் அதையும் பிரஷித் கிருஷ்ணாதான் உடைத்துவிட்டார். 11, 12, 13 இந்த 3 ஓவர்களில் 38 ரன்களை க்ளாசெனும் அபிஷேக்கும் எடுத்திருந்தனர். சேஸிங்கை வெற்றிகரமாக முடிப்பதை நோக்கி வேகமெடுத்திருந்தனர். பிரஷித் கிருஷ்ணா 14 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

ரன்ரேட் பிரஷர் ஏறுகிறது. இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மா அவுட். பிரஷித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரில் க்ளாசென் காலி. ஆட்டம் மொத்தமும் குஜராத் பக்கமாக வந்துவிட்டது. இதற்காகத்தான் பிரஷித் கிருஷ்ணாவுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
பிரஷித் கிருஷ்ணாவை குஜராத் அணி தெளிவாகவும் பயன்படுத்துக்கிறது. அவருக்கென ஒரு Role Clarity இருக்கிறது. பவர்ப்ளேயில் ஒரு ஓவரைத்தான் வீசுகிறார். மிடில் ஓவர்களில்தான் அதிகமாக வீசுகிறார். மிடில் ஓவர்களில் பேட்டர்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் செல்ல முயல்வார்கள். அதை செய்ய விடாமல் தடுப்பதுதான் பிரஷித் கிருஷ்ணாவின் வேலை.

அதனால்தான் அவர் எடுத்திருக்கும் 19 விக்கெட்டுகளில் பெரும்பாலான விக்கெட்டுகள் பெரிய விக்கெட்டுகள். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை பிரஷித் கிருஷ்ணா மிகச்சரியாகவும் செய்கிறார். நடப்பு சீசனில் அதிக விக்கெட் எடுத்திருக்கும் டாப் 10 பௌலர்களில் மிகக்குறைந்த எக்கானமி வைத்திருக்கும் இரண்டாவது பௌலர் இவர்தான்.

மேலும், வேகப்பந்து வீச்சாளர்களில் மிகக்குறைந்த எக்கானமி வைத்திருப்பது பிரஷித் தான். இவர் தனது ஓவர்களை டைட்டாக வீசுவதன் மூலம் பேட்டர்கள் மீது அழுத்தம் ஏறி மற்ற பௌலர்களுக்கும் விக்கெட் கிடைக்கிறது.
ஆக, குஜராத்தின் வெற்றிக்கு அவர்களின் டாப் 3 மட்டுமல்ல, பிரஷித் கிருஷ்ணாவும் மிக முக்கிய காரணமே.