
சென்னை: “கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்தி விட அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செவிவழிச் செய்திகள் மக்களின் ஐயத்தையும், அச்சத்தையும் அதிகரிக்கின்றன. எனவே மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விண்ணப்பங்களையும் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25% இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடவில்லை. மே மாதம் பிறந்து, பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்னும் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது.