திருமணம் என்றாலே பல லட்சம் செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை அடுத்தவர்கள் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள சுஷா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் எகுடெ (29). இவர் சீர்திருத்த முறையில் திறந்த வெளியில் பொதுமக்களை அழைத்து மிகவும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

விவசாயிகளுக்காக சாலை அமைத்த தம்பதி

முதுகலை வேளாண் பட்டதாரியான எகுடே தனது திருமணத்தை எளிய முறையில் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நிபந்தனையை முன்வைத்து திருமணத்திற்கு பெண் பார்த்தார்.

யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலியின் குடும்பத்திற்கு எகுடேயின் நிபந்தனைகள் பிடித்திருந்தன. இதையடுத்து இருவரது திருமணம் எளிய முறையில் நடந்தது.

அதே சமயம் திருமணத்திற்கு செலவு செய்ய திட்டமிட்டு இருந்த தொகையில் தனது கிராம விவசாயிகளுக்காக சாலை ஒன்றை எகுடே அமைத்து கொடுத்து அனைவரது பாராட்டை பெற்றுள்ளார்.

இது குறித்து எகுடே கூறுகையில், “எங்களது கிராம விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாய பொருள்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டிகூட சரியாக போக முடியாது. அதுவும் மழைக் காலம் என்றால் அந்த வழியை பயன்படுத்தவே முடியாது. எனவே இச்சாலையை அமைத்துக்கொடுத்தால் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கருதினேன்.

எனவே 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த விவசாய சாலையை அமைத்து கொடுத்திருக்கிறோம். குண்டு குழிகள் சரி செய்யப்பட்டு பயன்படுத்தும் வகையில் சாலையை உருவாக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

எகுடேயின் செயல் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க மக்களே!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *