
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தின் புரோமோஷன் விழா ஏப்ரல் 26 அன்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அதில், பஹல்காம் தாக்குதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ பழங்குடியினர் 500 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது போல, மனதையும் பொது அறிவையும் பயன்படுத்தாமல் தீவிரவாதிகளும் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.” என்றார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான் என்பவர் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதில், “ஒரு பெரிய பார்வையாளர்கள் கூட்டம் இருக்கும் சபையில் உரையாற்றிய விஜய் தேவரகொண்டா, இன்றைய சமூக-அரசியல் அமைதியின்மைக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடி மோதல்களுக்கும் இடையே பொருத்தமற்ற ஒப்பீட்டை தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பழங்குடிகளை அவமதித்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சட்டப்பூர்வ கருத்துக்காக நாங்கள் அதை பரிந்துரைத்துள்ளோம், மேலும் பெறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.