
மும்மொழி கொள்கை, பி.எம் ஶ்ரீ திட்டம்… வரிசையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களில் முகலாய மன்னர்களின் குறிப்புகளை நீக்கியுள்ளதும் விவாதப் பொருளாகி வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இப்போது அடிக்கடி பள்ளிக்கல்வித்துறை குறித்த சர்ச்சைக்குரிய விஷயங்களை ஹெட்லைன்களில் பார்க்க முடிகிறது.
கல்வியை கல்வியாகவும், மாணவர்களின் எதிர்காலமாகவும் அணுகாமல், அதிலும் மத்திய அரசு அரசியலைக் கொண்டு வருவது தான் இந்த சர்ச்சைகளுக்கு மிக முக்கிய காரணம் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகி உள்ள என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில், முகலாய, சுல்தான் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளது… புராணக் குறிப்புகள் இடம்பெற்றிருக்கிறது… ஆங்காங்கே இந்தி வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கிறது.
முகலாய மன்னர்களின் வரலாற்றை நீக்குவது என்பது கிட்டதட்ட இந்தியாவின் 1,200 ஆண்டுகால வரலாற்றை மறைப்பது ஆகும். ‘பாடப்புத்தக்கத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பகுதிகளை தான் நீக்கியுள்ளோம்’, ‘மாணவர்களின் எளிமைக்காக இந்த ஏற்பாடு’ என்று எந்த சால்ஜாப்புகளை கூற முயன்றாலும், இதற்கான உண்மையான பின்னணி நாம் அனைவராலும் யூகிக்க முடியும்.
ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின், ஐந்தாம் பாடத்தின் தலைப்பு ‘இந்தியா, தட் இஸ் பாரத்’. பாரத் என்ற ஒற்றை வார்த்தையே, பாடப்புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அரசியலை பறைசாற்றும்.
ஆங்காங்கே இருக்கும் சமஸ்கிருத ஸ்லோகங்களும், இந்தி மொழி வார்த்தைகள் மூலமும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து போராடி வரும் இந்தி திணிப்பை மறைமுகமாக உள்நுழைக்கிறது.
சுல்தான், முகலாய மன்னர்களின் குறிப்புகளை நீக்குவதன் மூலம் எப்படி மாணவர்களிடம் அறிவு முடக்கம் நடக்கும் என்பதை விளக்குகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
“வரலாறு என்பது நல்லது, கெட்டது, போர், கொள்ளை, அடிமைத்தனம் போன்ற அனைத்தும் கலந்தது தான். இவை அனைத்தையும் அப்படியே குறிப்பிட்ட வயதில் மாணவர்களிடம் கொண்டு செல்வது படிப்பு மற்றும் பாடப்புத்தகங்களின் கடமை.
இதை விடுத்து, குறிப்பிட்ட காலங்களை ஆண்ட மன்னர்களின் சமயத்தை கருத்தில் கொண்டு பாடப்புத்தகங்களில் அவர்களைப் பற்றிய குறிப்புகளை நீக்குவது மிகப்பெரிய தவறு. இங்கே விட்டுப்போன வரலாற்றை மாணவர்கள் வேறு எங்கு தெரிந்துகொள்வார்கள்?
எதிர்க்காலத்தில், இன்றைய மாணவர்கள் இந்த மன்னர்கள் ஆண்ட நிர்வாக முறையைப் பற்றி கடைசி வரை தெரிந்துகொள்ளாமல் போவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு. இதுவும் ஒருவகை அநீதி தான்.

உலகில் எந்த மன்னரும் போர் தொடுக்காமல் இல்லை. அப்படியிருக்கையில், ஒரு சிலர் செய்தது தவறு… பிறர் செய்தது தவறு ஆகாது என்ற புரிதலின் அடிப்படையில் வரலாற்றை எழுதுவது நியாயமாகாது.
இது மாணவர்கள் பெற வேண்டிய அறிவை முடக்குவது… தடுப்பது ஆகும்.
‘புனித இடங்கள்’ என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது குறித்து தொடர்கிறார்…
“என்.சி.ஆர்.டி பாடப்புத்தகத்தில், வரலாறு பாடத்தில் மட்டும் இந்த மாதிரியான மாற்றங்களை செய்யவில்லை. புவியியல் பாடப்புத்தகத்தில் ‘புனித புவியியல்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள்.
மலை, காடு, வயல்வெளி என்று தான் இயற்கையில் இருக்கிறதே தவிர, புனிதமான புவியியல் என எதுவும் இல்லை. புனிதம் என்பது நம்பிக்கை சார்ந்தது.
வேப்பிலையை சிலர் புனிதமானது என கருதலாம். ஆனால், மருத்தவர்களோ, அதை ‘மருத்துவக் குணம்’ கொண்டது என்று தான் எடுத்துகொள்வார்கள்.
தாவரவியல் மற்றும் மருத்துவவியலில் எடுத்துகொண்டால் வேப்பிலையில் உள்ள ரசாயனம் கிருமிநாசினி சக்தியை கொடுக்கிறது. இதை இப்படி தான் கற்றுகொடுக்க வேண்டுமே தவிர, புனிதம் என்று குறிப்பிடுவது மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக ஆகிவிடும்.

உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சமயத்திற்கும் ஒரு நம்பிக்கை உண்டு. அதைப் பாடப்புத்தகத்தில் கொண்டு வருவது நியாயமாகாது.
சமய புத்தகங்களில், ‘சூரியன் பூமியை சுற்றி வருகிறது’, ‘பூமி தட்டையானது’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எல்லாம் தவறு என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் நிரூபித்துவிட்டது.
இந்தத் தகவல்களை அறிவியல் அணுகுமுறை இல்லாமல், மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது கல்வியியல் செயல்பாடு ஆகாது.
அறிவியல், வரலாறு முதல் புவியியல் வரை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மதத்தை கொண்டு வருவது மிகப்பெரிய தவறு. வகுப்பறை பாடம் என்பது சமயங்களுக்கு அப்பாற்பட்டது.”
ஆங்காங்கே இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறதே என்ற கேள்விக்கு அவரின் பதில்…
“பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் பெயரிடுவது, அந்தப் புத்தகங்களில் ஆங்காங்கே இந்தி வார்த்தைகள் இடம்பெறுவது என்பது இந்திய மொழிகளின் அழிப்பு ஆகும்.
ஏற்கனவே வட இந்தியாவில் பல மொழிகள் இந்தியால் அழிந்துவிட்டது. பாடப்புத்தகங்களில் இப்படி கொண்டுவருவது மீதி இருக்கும் இந்திய மொழிகளையும் அழிப்பதற்கான வழி ஆகும்.
இந்திய மொழிகளின் அழிப்பிற்கு இந்தி ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
முதலில் இந்தியை இப்படி பாடப்புத்தகங்களில் கொண்டு வந்து, பிற மொழிகளை அழிப்பார்கள். பின்னர், சமஸ்கிருதம் தான் இந்திய மொழி என்று அறிவிப்பார்கள். இது தான் அவர்களது முயற்சி.”

மன்னர்களின் ஆட்சி நிர்வாக முறையை தெரிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்து…
“முகலாய மன்னர்களை பற்றி தான் பாடப்புத்தகங்களில் அதிகம் படித்தோம் என்ற வாதம் தவறானது.
தொடக்கத்தில் இருந்தே சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், குப்தர்கள், மௌரியர்கள், சந்திரகுப்தர், முகலாயர்கள், சுல்தான்கள் என அனைத்து மன்னர்களைப் பற்றியும் தான் நாம் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்திருக்கின்றது.
முகலாய மன்னர்கள் உள்பட ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் நிர்வாகத் திறன் வேறுவேறு விதமாக இருந்துள்ளன. ஒரு காலக்கட்டத்தை முற்றிலும் சொல்லாமல் போவது, வரலாற்றின் ஒரு பகுதியின் நிர்வாகத்தையே சொல்லாமல் போவதாக ஆகிவிடும்.
சுல்தானிய ஆட்சி, முகலாய ஆட்சி பற்றிய குறிப்புகளை நீக்குவது இருட்டடிப்பு ஆகும். இதனால், மாணவர்களுக்கு முழு வரலாறும் தெரியாமல் போய்விடும்.
சோழர்களின் அரசு நிர்வாகம், முகலாயர்களின் அரசு நிர்வாகம் என்பது மிகவும் முக்கியமானது… கவனிக்கப்பட வேண்டியது… வெவ்வேறு தன்மை கொண்டது. மாணவர்கள் ஒப்பிட்டு படித்தால் ஒவ்வொன்றன் பற்றிய தனிசிறப்புகளும் தெரியும்.
அக்பரின் நிர்வாகம், வரி, சமய சார்பற்ற தன்மை பற்றி பாடப்புத்தகத்தில் கூறினால், அக்பர் காலம் சிறந்த காலம் என்று மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். இதை ஆபத்தாக பிறர் உணருகிறார்கள். முகலாய மன்னர்களின் பற்றிய நல்ல விஷயங்கள் மாணவர்களிடம் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்று பார்த்துக்கொள்கிறார்கள்.
ஒன்றிய அரசை இன்று ஆள்பவர்கள் இந்தியாவை எப்படி கட்டமைக்க விரும்புகிறார்களோ, அதை தான் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அப்படி பாடத் திட்டங்களை வடிவமைக்கிறார்கள்.” என குற்றம்சாட்டினார்.

இப்போது வரலாற்றை மறைப்பதால், பின்னாளின் ஏற்படும் ஆட்சி நிர்வாகத்தில் எப்படி பாதிப்பை உருவாக்கும் என்பதை விளக்குகிறார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி.
“கல்வியில் அரசியல், மதம் போன்றவற்றை தனிப்பட்ட ஒரு நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடாது.
இந்திய வரலாற்றை மாணவர்கள் உள்ளது உள்ளதுப்போன்றே தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் எதிர்க்காலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமானால், அவர்களுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்றால் அதை நீக்கலாம். ஆனால், வரலாற்றின் ஒருப்பகுதியை நீக்குவது தவறு.
இது மாணவர்கள் மனதில் சிறு வயதிலேயே வேற்றுமையை விதைத்துவிடும்.
முகலாயர்களை பற்றிய குறிப்புகளை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குகிறார்கள் என்றால் வரலாற்றின் ஒருப்பகுதியே காணாமல் போய்விடும்.
போட்டித்தேர்வுகளிலும் இந்தப் பாடம் நீக்கப்படுமா? அப்படி நீக்கினால், நாட்டின் மற்றும் மாநிலத்தின் ஆட்சியாளர்களுக்கு நாட்டின் முழு வரலாறும் தெரியாமல் போய்விடும் அல்லவா? இது முறையானதாக இருக்காது.
முகலாய மன்னர்களின் வரலாற்றை நீக்குகிறார்கள்… இன்னும் கொஞ்சம் நாட்களில் தாஜ் மஹாலை இடித்துவிடுவார்களா என்ன? செய்யமாட்டார்கள் தானே. அப்போது அந்தத் தாஜ்மஹாலுக்கு பின் இருக்கும் வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
பாடத்திட்டங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு, அறிவியலில் மாற்றம் கொண்டுவரலாம். ஆனால், வரலாறு மற்றும் மொழிப்படிப்புகளில் மாற்றம் என்பது கூடவே கூடாது.
மாநில பாடத்திட்டத் தாண்டி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை போட்டித்தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்காக தான் சி.பி.எஸ்.இ-யில் படிக்க வைக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் வரலாறு மறைக்கப்படும் போது, பெற்றோர்களின் நோக்கமே மாறுபட்டுவிடுகிறது.

எக்காரணத்தைக் கொண்டும், மாணவர்களின் கல்வியில் அரசியல் என்பது கூடாது” என்று முடிக்கிறார்.
எப்படி பார்த்தாலும், மாணவர்களின் கல்வியில் அரசியல் என்பது மிக மிக தவறானது. மாணவர்களின் மனதில் இன்று என்ன விதைக்கிறோமோ, அது தான் அவர்கள் வளர்கையில் அவர்கள் செயல்களிலும் பிரதிபலிக்கும்.
இன்றைய சமூதாயத்தில் திரும்ப திரும்ப சில விஷயங்கள் முன்னிறுத்தப்படுகிறது. அதற்கேற்றாற் போல பாடப்புத்தகங்களிலும் மாற்றம் நிகழும்போது, இந்த மாணவர்கள் வளர்கையில் அது தான் உண்மை என்று நம்புவார்கள். இதனால், இந்தியாவின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவமே அழிந்துபோவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உண்மை வரலாற்றைக் கூறி, உங்களுக்கு பிடித்த கொள்கையை பின்பற்றுங்கள் என்பதே சரியான அணுகுமுறை. அதை விடுத்து, நான் சொல்வதை மட்டும் படியுங்கள்… அதன் மூலம் உங்கள் சித்தாந்தை நான் மாற்றி அமைக்கிறேன் என்பது சர்வாதிகரத்தனம் தான்.
அதனால், கல்வியில் எந்த மாற்றமாக இருந்தாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கு எதிராக மாநில அரசுகளும், மக்களும் நிச்சயம் ஒன்றுக்கூட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்து.!