Doctor Vikatan: என் வயது 32. தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் வேலைக்குச் செல்கிறேன். டூ வீலரில் செல்கிறேன். அலுவலகத்தை அடைந்ததும் தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தவிர, எப்போதுமே வெயிலில் அலைந்துவிட்டு வந்தாலே எனக்கு தலைவலிக்கிறது. இதற்கு என்ன காரணம்… தவிர்ப்பது எப்படி?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

வெயிலில் அலைந்துவிட்டு இருப்பிடம் திரும்பும்போது சில விஷயங்கள் நடக்கும். ஒரு பக்கம் வெளிச்சூழலின்  வெப்பநிலை அதிகரிக்கும், இன்னொரு பக்கம் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். இந்நிலையில்  உடலின் ரத்தக்குழாய்களின் தன்மையில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே அடிக்கடி தலைவலி  வரும் தன்மை  கொண்டவர்களுக்கு இந்தச் சூழலில் தலைவலியின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம்.

வெயிலில் போய்விட்டு வரும்போது தலைவலி ஏற்பட பரவலான இன்னொரு காரணம், டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு.  மற்ற நாள்களைவிட, வெயில் காலத்தில் நம் உடலிலுள்ள நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அதிகமாக வியர்வை வெளியேறும். அதை ஈடுகட்ட நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படிக் குடிக்காதபட்சத்தில், ‘டீஹைட்ரேஷன் ஹெட்டேக்’ (dehydration headache) என்ற தலைவலி ஏற்படும். அதிகம் வெயிலில் நின்றபடி வேலை செய்வோர், ஹெல்மெட் அணிந்துகொண்டே இருப்பவர்களுக்கெல்லாம் இது மிகவும் சகஜம்.

வெயில் காலத்தில் பொதுவாகவே திரவ உணவுகளாகவே எடுத்துக்கொள்ளத் தோன்றும். அதனால், டீ, காபி மட்டுமன்றி, ஜூஸ், பாட்டில் பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வோர் பலர். இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் காரணமாக, உடலில் தேவையின்றி குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். அதனால் நீர்ச்சத்து குறையத் தொடங்கும். சிறுநீர் அதிகம் வெளியேறும். இதனாலும் சிலருக்கு தலைவலி வரலாம்.

உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

வெயிலில் அலைவதும், ஏசியில் இருப்பதுமாக சிலர் மாறி மாறி இருப்பார்கள். ஏசியில் இருக்கும்போது  ஒருவரது உடலின் வெப்பநிலை ஒரு மாதிரியும், வெளியே சென்றதும் வேறு மாதிரியும் இருக்கும்.  இந்த மாறுபாட்டின் காரணமாகவும் சிலருக்கு தலைவலி வரலாம். இந்தப் பிரச்னைகள் எல்லாமே கோடைக்காலம் முடியும்வரை நீடிக்கலாம். எந்தக் காரணத்தால் தலைவலி வருகிறது என்று தெரிந்து அதைத் தவிர்த்தாலே போதும். தலைவலி மிக அதிகமாக இருக்கும்போது பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *