
சென்னையில் நேற்று ஜி.எஸ்.டி வரி முதல் கூட்டணி வரை பலவற்றை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்…
ஜி.எஸ்.டி
“ஜி.எஸ்.டி நடுத்தர மக்களை பாதிக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். இந்த விவாதம் தவறானது.
ஜி.எஸ்.டியை நான் மட்டும் தனி நபராக விதிக்கவில்லை. அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் முடிவுப்படியே, இந்த வரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி குறித்த தீர்மானங்கள் அனைத்து மாநில அமைச்சர்களின் ஒப்புதலுடன் தான் எடுக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி விதிப்பிற்கு முன்பு, மாநில அரசுகளின் வரி விதிப்பு முறை இருந்தது. அந்த வரி விகிதத்தை விட, இப்போது இருக்கும் ஜி.எஸ்.டி வரி குறைவு தான். அதை, இன்னும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திமுக சொந்தம் கொண்டாடுகிறது. சாதி குறித்து திமுக பேசவே கூடாது… இதில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் சமத்துவத்தை கொண்டுவர திமுக அரசு முயற்சி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே குடிநீரில் கழிவு நீர் கலந்தது நடந்து உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகு, அனைத்து மாநிலங்களுக்கு அதுக்குறித்த புள்ளிவிவரங்கள் வழங்கப்படும். அதை வைத்து, பின் தங்கியவர்களுக்கு எந்த வகையில் வாய்ப்பு கொடுக்கலாம் என்பதை யோசிக்க வேண்டும்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் நிதி குறித்து தொடர்ந்து கூறி வருகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு திமுகவை சேர்ந்த ஒருவர் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். ஆனால், பொதுவெளியில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறுகிறது திமுக அரசு.
மாணவர்களின் எதிர்காலம்
தேர்ச்சி பெற்றால் தான் குழந்தைகளுக்கு எதிர்காலம் என அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கிறார்கள். அதில் மேலும் ஓராண்டு படித்தால் மாணவர்களுக்கு கற்றல் அறிவு கிடைக்கும் என்பது கூட யோசிப்பதில்லை.
அனைத்து மாணவர்களை தேர்ச்சி அடைய வைப்பதால் மட்டுமே அவர்களின் மனநலன் உயர்ந்துவிடாது. இதில் படிப்பின் தரம் குறித்தும் யோசிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலமும் முயற்சி செய்ய வேண்டும். படிப்பின் தரம் குறையும்போது, பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. கல்லூரிக்கு வரும்போது, ‘நாங்கள் ஏன் ஐ.ஐ.டிக்கு தகுதி பெறவில்லை?’ என்று கேட்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்தால் கல்வி தரத்தின் நிலை என்ன? இந்த விவகாரம் குறித்து நிபுணர்களுடன் பேசி முடிவு செய்ய வேண்டும்.

அதிமுக – பாஜக கூட்டணி
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். எங்களது கூட்டணி குறித்து அவர் பேசுவதற்கு முன்பு, அமைச்சர்களின் பதவி நீக்கம் குறித்து அவர் யோசிக்க வேண்டும். ஊழல் கூட்டணிக்காரர்கள் எங்கள் கூட்டணி குறித்து பேசக்கூடாது.
தனியார் நிறுவனங்களுக்கு வரி சலுகையா?
பாஜக ஆட்சியில் தனியார் நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டிலும் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். ஆக, அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறதா? இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என்று பேசினார்.