தமிழ் ஊடகத்துறையில் 25 ஆண்டுகளாக பத்திரிகையாளராகவும், பல கட்டுரை நூல்களின் ஆசிரியராகவும் இருந்து வருபவர் எழுத்தாளர் ஜெயராணி. தற்போது ‘போதி முரசு’ என்ற இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டுவருகிறார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘செந்நிலம்’ கடந்த டிசம்பர் மாதம் சென்னை புத்தகக் காட்சியில் ‘சால்ட்’ பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது ‘செந்நிலம்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘செவ்வரளிப் பூச்சரம்’ என்ற சிறுகதை, அவரது அனுமதியின்றி ‘Seeing Red’ என்ற தலைப்பில் குறும்படமாக உருவாகி வெளியாகியிருப்பதாகவும், அந்தப் படத்தின் இயக்குநர் ஷாலினி விஜயகுமார் கதை திருட்டு செய்திருப்பதாகவும் பகிரங்கமாகப் புகார் செய்திருக்கிறார்.

‘Seeing Red’ குறும்படம், MAMI என்ற மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, MAMI SELECT திரைப்பட விழாவின் பிரம்மாண்ட மேடையில் திரையிடப்பட்டு, இப்போது யூடியூப் தளத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. அது பிராமண குடும்பத்து பெண்களை மையமாக எடுக்கப்பட்ட கதையாக விளங்குகிறது. இந்தக் கதை திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக இருவரிடமும் பேசினேன்.

அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன்!

இதுகுறித்து எழுத்தாளர் ஜெயராணி, “கடந்த ஏப்ரல் 24 அன்று எனது நண்பர் ஒருவர், ‘உங்களது கதையைப் படமாக்கியிருக்கிறார்கள், பாருங்கள்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார். அவர் கூறிய 28 நிமிடங்கள் ஓடும் அந்தக் குறும்படத்தைப் பார்த்தேன், அப்படியே என் கதையைத் திரிபு செய்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடும் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். தனிப்பட்ட முறையிலும், பத்திரிகையாளராகவும், இங்கே விளிம்புநிலைப் பெண்களுக்கு எதிராக சாதிய, வர்க்க ரீதியாக மூடநம்பிக்கைகள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பதைப் பார்த்து, சடங்குகளுக்கு எதிராக எழுதப்பட்டதே அந்தச் சிறுகதை.

எழுத்தாளர் ஜெயராணி

பேய் பிடித்தல், அதற்கான பரிகாரம் என்ற பெயரில் பலவிதமான கொடுமைகளை இன்றும் கிராமப்புறப் பெண்கள் அனுபவிக்கின்றனர். இப்படியான சடங்குகளைக் கேள்வி கேட்கும் கலைப்படைப்பே ‘செவ்வரளிப் பூச்சரம்’. சாட்டையால் அடிக்கப்படும் பேயோட்டும் சடங்கில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, பெண்கள் அனைவரும் ஆண்களைத் திருப்பி அடிப்பதாகக் கதையை முடித்திருப்பேன்.

இதில் உழைக்கும் மக்களின் வலி பின்னியிருக்கிறது. சிறுவயதில் நானும் என் அம்மாவும் இந்தவிதமான சடங்கில் பாதிக்கப்பட்டு இருப்பதால், இந்த கதை எழுதியது எனக்கு பெரிய மனஆறுதலை கொடுத்தது.” என்றார்.

அந்தக் கதையில் தன்னுடைய ‘செண்பகம்’ என்ற உழைக்கும் பெண்ணின் தோற்றத்தை, மடிசார் கட்டிய பேயாக மாற்றியிருப்பதாகவும், அதேபோல் ஒரு ஊரில் நடக்கும் சம்பவத்தை வீடாக மாற்றி, பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் தொடர்ந்தவர், “முதல் காட்சியிலிருந்து தொடங்கி கடைசி காட்சி வரை, ‘Seeing Red’ படத்தில் எல்லாமே என் கதையின் திருட்டுதான். எந்த ஊரில் பிராமணர்கள் பேயோட்ட பூசாரிகளை அழைப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கே, என் கதையில் வரும் ‘சவுக்கடி சுடலை’ கதாபாத்திரத்தை ‘விப்படி மூர்க்கன்’ என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். அது என்ன விப்படி ? அதேபோல், எனது கதையில் ‘வயதுக்கு வந்த குழந்தை’ ஒன்று பயப்படுவது போல, இந்தக் கதையிலும் வருகிறது.

கிளைமாக்ஸ் அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் வருகிறது. சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வியலை பிராமண சமூகத்தில் நடப்பதாக மாற்றியது அப்பட்டமான கலாசாரத் திருட்டு, அறிவுச் சுரண்டல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் சொடக்கு போடுவதை கூட அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

வழக்குத் தொடர இருக்கிறேன்

“எனக்கு வேண்டியது பணமோ, அங்கீகாரமோ இல்லை. இப்படியான வரலாற்றுத் திரிபு உள்ள ஒரு படைப்பில் என் பெயர் வருவதை அவமானமாகவே எண்ணுகிறேன். எனக்கு வேண்டியது, இந்தப் படைப்பின் இயக்குநர் ஷாலினி விஜயகுமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதும், இனி திரைவிழாக்களில் இந்தப் படம் திரையிடப்படக்கூடாது என்பதுதான். எனது உண்மையான கதையை வைத்து நான் ஒரு முழுநீளப் படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். அது இந்த முயற்சியால் தடைபட்டுப் போகிறது. அதாவது, நான் சொல்ல நினைப்பது, இதுவரை திரையில் சொல்லப்படாத உழைக்கும் விளிம்புநிலைப் பெண்களின் கதை. அது முடக்கப்படுவது வரலாற்று அநீதியல்லவா? ஒருவரின் அடையாளத்தைப் பறிக்க நினைப்பது அவமானகரமான செயல். இந்தப் படத்தின் மேற்பார்வையாளராக இருக்கும் மூத்த இயக்குநரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஒரு வாரம் ஆகியும் எந்தப் பதிலும் வரவில்லை. வரும் திங்கள்கிழமை இந்தப் படத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்,” என்றார்.

`நான் உறுதியாக நிற்கிறேன்’

இதுகுறித்து ‘Seeing Red’ படத்தின் இயக்குநர் ஷாலினி விஜயகுமாரைத் தொடர்புகொண்டு பேசினேன். (இவர் ரோமியோ, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்துள்ளார்.) முதலில் தொலைபேசி அழைப்பை எடுக்காதவர், வாட்ஸ்அப் மெசேஜில், “என்னுடைய ‘Seeing Red’ திரைப்படம் முற்றிலும் புதிய படைப்பு என்பதை நான் தெளிவாகவும், மரியாதையுடனும் கூற விரும்புகிறேன். மற்ற கதைகளுடன் ஏதேனும் ஒற்றுமை இருப்பது முற்றிலும் தற்செயலானதே. படைப்புத் துறையில் கதைத் திருட்டு, அடுத்தவரின் உழைப்பைக் கைப்பற்றுதல் ஆகியவை கவலைக்குரிய பிரச்னைகள் என்பதை நான் உண்மையாக ஒப்புக்கொள்கிறேன்.

ஷாலினி விஜயகுமார்

அதைத் தீவிரமான பிரச்சினையாகவும் பார்க்கிறேன். ஆனால், என்னுடைய படைப்பு உருவாக்கத்தில் இருக்கும் நேர்மையையும், கதையில் இருக்கும் உண்மைத்தன்மையிலும் நான் உறுதியாக நிற்கிறேன்” என்றார். மேலும் அடுத்தகட்டக் கேள்விகளைக் கேட்க, அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது எந்தப் பதிலும் வரவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *