
வெயிலில் செல்ல நாம் ஏன் இவ்வளவு தயங்குகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக அளிக்கப்படும் முதல் பதில் வியர்வை மற்றும் அதனால் உருவாகும் துர்நாற்றம், அரிப்பு மற்றும் சருமப் பிரச்னைகள்.
நம்மில் பெரும்பாலானோர் சுத்தமாக இருப்பதையே விரும்புகிறோம். வியர்வை, துர்நாற்றம் போன்றவை சுற்றி இருப்பவர்களுக்குச் செய்தி அனுப்பாமல் இருக்க, வாசனைத் திரவியங்களை உபயோகிக்கிறோம். சங்கிலி போல உருவாகும் இந்தச் சங்கதிகள்தான் வெயில் நமக்குத் தரும் எரிச்சலூட்டும் தண்டனைகள்.
“வெயிலினால் உடல்ரீதியாக ஏற்படும் டீஹைட்ரேஷன் (உடல் வறட்சி) போன்ற பிரச்னைகளைத் தாண்டி மனரீதியாகவும் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும்’’ என்கிற தகவலுடன் ஆரம்பிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. வெயிலுக்கும் மனநிலைக்குமான தொடர்பு பற்றி அவர் பகிரும் தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
‘‘மேலை நாடுகளில், பருவ காலங்களுக்கும் மனித மனநிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து நிறைய ஆய்வுகள் உண்டு. முக்கியமாக, உஷ்ணமான சீதோஷ்ண நிலை இருக்கும்போது ஒருவித எரிச்சலுடனே நாம் எல்லாக் காரியங்களையும் அணுகுவோம்.
வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வு, மனச்சோர்விற்கும் வழி வகுக்கும். மற்ற நாள்களைப்போல நம்முடைய பணிகளை இயல்பாக முடிக்க முடியாமல் போவதால், இது நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக வெயில் மேல் நமக்கு ஏற்படும் கோபத்தை நாம் மற்றவர்களின் மீது வெளிப்படையாகக் காட்டி விடுகிறோம். இத்தகைய சிரமங்கள் ஏற்படாமல் இருக்க, நம்முடைய நாள்களைத் திட்டமிடுதல் என்பது கோடைக்காலத்தில் அவசியமான ஒன்றாகிறது.

வெயில் தொடங்கும் முன்னரே அலுவலகத்திற்குப் பயணம் செய்வது; வெயில், வாகனப்புகை, காற்று மாசு போன்றவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது போன்றவை பலன் தரும்.
முன்னர் நாம் ஒரே மூச்சில் செய்து வந்த ஒரு வேலையை வெயில் காலத்தின்போது அவ்வாறு செய்ய முடியாமல் போகலாம். அதற்காக எரிச்சலோ, கோபமோ படாமல் அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்வது நலம்.
டீ, காபி போன்றவற்றுக்குப் பதிலாகப் பழச்சாறுகள் குடிப்பது நமக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். டயட் விஷயத்திலும் கவனம் செலுத்தி நீர்ச்சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல்நலமும் மன நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.