
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மங்களூருவில் 6-ம் தேதி வ‌ரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த சுஹாஸ் ஷெட்டி (38) பஜ்ரங் தளம் அமைப்பில் தென்பகுதி செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு சுள்ளியாவை சேர்ந்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு (27) வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக அடுத்த சில தினங்களில் முகமது பைசல் (23) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுஹாஸ் ஷெட்டிக்கு நேரடி தொடர்பு இருந்ததால் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.