உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

சாமி வேடமிட்ட குழந்தைகளுக்கு குளிர்பானம் அளிக்கும் இஸ்லாமியர்கள்

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் 4 ஆம் நாளில் மதுரை வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் சுவாமியும், அம்மனும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி தெற்குவாசல் வழியாக சின்னகடைத் தெரு, சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பள்ளிவாசல் முன்பு

சுவாமியும் அம்மனும் தெற்குவாசல் பகுதியில் வந்தபோது அப்பகுதியிலுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும், சிவாச்சாரியார்களுக்கும், குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

மத நல்லிணக்கம்

அப்போது பள்ளிவாசல் முன்பாக தங்கப் பல்லக்கில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளியபோது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பள்ளிவாசல் முன்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கு நிறுத்தப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை பள்ளிவாசல் நிர்வாகிக்கு சிவாச்சாரியார் அணிவித்து மரியாதை செய்தார்.

தெற்குவாசல் பள்ளிவாசல் முன்பு

சுவாமிகள் வீதி உலாவின் போது மீனாட்சியம்மன், சிவபெருமான், முருகர், கிருஷ்ணர், ஆண்டாள், கருப்பசாமி, வேடமிட்டபடி குழந்தைகள் வந்தனர்.

தெற்குவாசல் பகுதி பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்த இஸ்லாமியர்கள் தங்கபல்லக்கில் எழுந்தருளிய அம்மனையும், சுவாமியையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுவாமி பல்லக்கு ஊர்வலத்தில் வருகை தந்த பக்தர்களையும், சாமி வேடமிட்டு வந்த குழந்தைகளையும் வரவேற்று மரியாதை செய்தனர்.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மதுரை சித்திரைத்திருவிழாவின் நடைபெறும் இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *