
உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 151 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இயற்கை விவசாயம் மேற்கொள்ள ஊக்கத்தொகை வழங்குவது, அதற்கான சான்றிதழின் பதிவு கட்டணத்துக்கு முழு விலக்கு அளிப்பது, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் வசதிகள் ஏற்படுத்துவது, இயற்கை விவசாயத்துக்கான தேசிய இயக்கம் என பல்வேறு திட்டங்கள் தமிழக வேளாண் துறை சார்பில் இந்த 2025-26-ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளன.