
மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.
இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட் குவாரி ஊழலை வெளிப்படுத்தினார். அதையடுத்து, 2014-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்த சகாயம், கிரானைட் ஊழலால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக 2015-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த சகாயம், தனது பணிக் காலம் முடிவதற்கு முன்பாகவே ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றார்.
அதேசமயம், கிரானைட் குவாரி ஊழல் வழக்கு ஒருபக்கம் மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவ்வாறான சூழலில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சகாயத்துக்கு மதுரை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கியிருந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதால், தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.

இது தொடர்பாக, அரசு வழக்கறிஞருக்கு சகாயம், பாதுகாப்பைத் திரும்பப்பெற்றது தவறு என்றும், கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், தனக்கு அரசு கொடுத்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்றும், அதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில், யாருக்குப் பாதுகாப்பு அளிப்பது என்பது பற்றி உளவுத்துறை, காவல்துறையுடன் ஆலோசித்து உள்துறை முடிவெடுக்கும் என்றும், சகாயத்துக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்திருக்கிறது.