
மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-க்கு கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு பங்கஜா முண்டேயின் போனுக்கு ஆபாச மெசேஜ்களையும் அனுப்பிக்கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத பங்கஜா முண்டே தொடர்ச்சியாக ஆபாச போன் அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால், இது குறித்து பங்கஜா முண்டே பா.ஜ.க சமூக வலைத்தள பிரிவில் தெரிவித்தார். உடனே பா.ஜ.க சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் நிகில் பம்ரே இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் சைபர் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போன் செய்த நபர் எங்கு இருக்கிறார் என்பது அவரது போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆபாச போன் செய்த நபர் புனேயில் இருப்பது தெரிய வந்தது.
உடனே புனே பொசரி போலீஸாரின் துணையோடு மும்பை சைபர் பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவனது அமோல் காலே (25) என்று தெரிய வந்தது.
விசாரணையில் அமோல் காலே குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவனை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். புனேயில் கைது செய்யப்பட்டு இருந்தாலும், அந்த நபரின் சொந்த ஊர் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்று விசாரணையில் தெரிய வந்தது. பங்கஜா முண்டேயின் சொந்த ஊரும் பார்லியாகும். அதனால் என்ன காரணத்திற்காக இது போன்று போன் செய்து ஆபாசமாக பேசினார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.