
புதுடெல்லி: “நல்ல திட்டங்கள், கொள்கைகளை முதலில் எதிர்த்து, அதுகுறித்து அவதூறு பரப்பி, பின்னர் மக்கள் அளிக்கும் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதனையே ஏற்றுக்கொள்ளும் பாஜகவின் முந்தைய பாணியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு முடிவும் அமைந்திருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “பல ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பை ஒடுக்க முயன்ற மோடி அரசு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி, எண்ணற்ற சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளின் தொடர் போராட்டம் காரணமாக இப்போது அடிபணிந்துள்ளது. சமூக நீதிக்கான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். நேற்று வரை அப்பெயரை சொல்வதைக் கூட தவிர்த்து, அதனைத் தாமதப்படுத்துவதிலும், கேலி செய்வதிலும் எந்தவொரு விஷயத்தையும் தவறவிட்டுவிடாத மோடி அரசு, மக்களின் பெரிய அளவிலான நெருக்கடி மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு அடிபணிந்துள்ளது.