
அஜித் நடித்திருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருக்கிறார் அஜித்.
அப்படி ‘இந்தியா டுடே’ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்ததற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். அந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேசத் தொடங்கிய அஜித், “நான் ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ததற்குக் காரணம் இருக்கிறது. ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு முந்தைய என்னுடைய சில படங்கள் என்னைக் குற்றவுணர்ச்சியடையச் செய்தன. பெண்களை ஸ்டாக்கிங் செய்வது போன்ற விஷயங்களை என்னுடைய திரைப்படங்கள் ஊக்குவிப்பது போலத் தோன்றியது.
வில்லன்கள் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்யும்போது கதாநாயகன் சென்று அவர்களைக் காப்பாற்றுவது, காதல் என்கிற பெயரில் கதாநாயகன் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்வது போன்ற சித்தரிப்புகள் என்னுடைய படங்களில் தொடர்ந்திருக்கின்றன.

நாங்கள் திரையில் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் பின்பற்ற நினைப்பார்கள். நான் முந்தைய திரைப்படங்களில் செய்த தவறுகளைச் சரிசெய்வதற்கு ‘பிங்க்’ திரைப்படம் ஒரு வழியாக இருந்தது. அத்திரைப்படத்தை நான் ரீமேக் செய்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
நான் இப்போது கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். இதே நிலைப்பாட்டிலிருக்கும் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் சந்திப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதைத் திட்டமிட முடியாது. நான் ஓய்வை அறிவிக்கும் சூழலுக்கு ஒருவேளை தள்ளப்படலாம்.” எனக் கூறினார்.